Friday 16 November 2012

பதிப்பு ௩(3) - பழந்தமிழரின் எழுத்துப்பலகை-ப்ராமி



வணக்கம்!


குமரிமாந்தனின் பரிணாம வளர்ச்சியையும் அவன் மொழிக்கு எழுத்துருவம் கொடுத்ததையும் பற்றி முன்னே கூறி இருந்தேன். இவ்வாறாக எழுத்துருவம் பெற்றதாக கருதப்படும் நம் தமிழ் மொழி, இப்படி ஒரு அழியா புகழையும் மாட்சிமையையும் பெற ஆரம்பித்தது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். பரிணாம வளர்ச்சியின் விளைவாகக் குமரி மாந்தன் தன் மொழிக்கு எழுத்துருவம் கொடுத்தது முதல் தொல்காப்பியம் வரையிலான தமிழ் வரலாறு மிகவும் சுவாரசியமானது. தொல்காப்பியம் தான் இது வரையில் தமிழில் கண்டெடுக்கப்பட்ட மிகவும் பழமையான நூல் என்பதால் தான் நான் இங்கு தொல்காப்பியத்தை ஒரு காலக்குறியாக குறிப்பிட்டுள்ளேன். தொல்கப்பியத்தின் காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டாக இருக்கக்கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன. தொல்காப்பியம் எனும் கடலைப்பற்றி மற்றொறு பதிவில் விளக்கமாக காண்போம்.

இப்படி ஒரு பழமையான மொழிக்கு, அது தோன்றிய காலத்திலேயேவா பெயர் வைத்திருப்பார்கள்? பெயர் என்பதே ஒரு பொருளை மற்ற பொருட்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டத்தானே பயன்படுகிறது. குமரிமாந்தன் அவன் மொழிக்கு எழுத்துருவம் கொடுத்த போது இந்த மொழியை தவிற வேறு எந்த மொழியும் வழக்கில் இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அவனது மொழியை வேறு எந்த மொழியிலிருந்தும் வேறுபடுத்திக்காட்ட வேண்டிய அவசியமே அவனுக்கு இருந்திருக்காது. அதனால் தமிழுக்கு பெயர் வைத்தது இந்த தொடக்கநிலை தமிழனாக இருக்க சாத்தியம் இல்லை. நம் மொழிக்கு பெயரிட்ட போது கண்டிப்பாக அது நல்ல வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். தமிழைத் தவிற வேறு மொழிகளும் வழக்கில் இருந்த காலத்தில் தான் அதற்கு பெயர் வைக்க வேண்டிய அவசியம் உண்டாகி இருக்கக்கூடும் என்பதே தருக்கம்.

தமிழ் எழுத்துக்களும் குமரி மாந்தனும்:









தமிழிற்கு பெயரிடப்பட்ட அந்த காலத்திலே தமிழ் எழுத்துக்களும் நல்ல வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இப்போது இந்த எழுத்துக்களின் வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொள்வோம். குமரிமாந்தன் அவன் மொழிக்கு எழுத்துருவம் கொடுத்தபோது அவன் அதை எந்த ஒரு இலக்கிய நயத்துடனும் செய்திருக்க மாட்டான். அவன் முதலில் எழுத ஆரம்பித்த காலம் அது. அவன் எழுதிப்பழக ஆரம்பித்த போது அவனுக்கு ஏடுகளோ பலகைளோ இருந்திருக்காது. குகைச்சுவர்கள், பாறைகள், அவன் பயன் படுத்திய பாத்திரங்கள் போன்றவைகளே அவனுக்கு எழுத்துப்பலகைகளாக பயன்பட்டிருக்கும். இவ்வாறு அவன் செதுக்கிய கல்வெட்டுகளே தமிழின் முதல் ஆவணங்கள். அவனது இந்த கல்வெட்டு பதிவுகளின் எழுத்துக்கள் பெரும்பாலும் சித்திர வடிவிலேயே இருந்ததாக அகழ்வாய்வுகள் கூறுகின்றன. இந்த சித்திர எழுத்துக்களை இன்றைய ஆய்வாளர்கள் கண்டெடுத்தப்போது அவர்கள் அதை “ப்ராமி” என்றும், பல திராவிட மொழிகளுக்கு மூலமாக இருந்த இந்த மொழியை மூலதிராவிடமொழி என்றும் அழைத்தனர். இவ்வாறு மூல திராவிடமொழியாக திகழ்ந்த தமிழில் இருந்து பிரிந்தவை தான் பிற திராவிட மொழிகளாகும். மூலதிராவிடமொழியையும் அதன் கிளை மொழிகளையும் இனைத்தால் அதை ஒரு திராவிட மொழிக்குடும்பம் என்று அழைக்கலாமா?


ப்ராமி எனப்படும் தமிழ் ஆவணங்கள்:


இந்த மூலத்திரவிடமொழி, அதாவது இந்த சித்திர எழுத்துக்களாலான மொழி தமிழை ஒத்து இருப்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. அதாவது இந்த சித்திர எழுத்துக்களுக்கும் நம் இன்றைய தமிழின் எழுத்துக்களுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாக தமிழ் ப்ராமி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் தமிழ் ப்ராமி பதிவுகள் எகிப்து நாட்டில் கண்டெடுக்கப்பட்டதாக “தி இந்து (THE HINDU) நாளிதழிலே வந்த செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.











 உலகெங்கும் தமிழ் ஆய்வு இன்றும் நடந்தவண்ணம் தான் உள்ளது. கண்டெடுக்கப்பட்ட எகிப்து ப்ராமியிலிருந்த மொழி தமிழ் தான் என்றும் அது கி.மு ஒன்றாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கக்கூடும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். திராவிட மொழிகளில் பழமையானது தமிழ் தான் என்பதையும் தமிழ் பல திராவிட மொழிகளுக்கு தாய் என்பதையும் திராவிட மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் கூறியுள்ளனர். திராவிட மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் திரு. பர்ரோவும், திரு. எமனோவும் இணைந்து “திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி” (Dravidian Etymological Dictionary) வெளியிட்டனர் என்றால், தமிழ் மொழியின் வளர்ச்சியை உணருங்கள். தமிழ் எழுத்துக்கள் அன்றைய ப்ராமியின் சித்திர எழுத்துக்களிலிருந்து தான் உருவானது என்பதை அறிய அன்றைய சித்திர வடிவ ப்ராமி எழுத்துக்களையும் இன்றைய தமிழ் எழுத்துக்களையும் ஒப்பிட்டு பார்த்தாலே போதுமானதாக இருக்கும்.


தமிழின் இருண்ட காலம்:


குமரிகண்டதிலிருந்து தொல்காப்பியம் வரை தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியை தமிழ் மொழியின் வளர்ச்சியாகவே கருதலாம். இந்த எழுத்துகளை பற்றி அறிய நம்மிடம் இருப்பது தொல்பொருள் ஆய்வுகளில் கிடைத்த கல்வெட்டுகள், நடுகற்கள், செப்பேடுகள் போன்றவைதான். தொல்காப்பியம் வரையிலான வரலாறு இன்னும் சரியாக வகுக்கப்படாமல் தான் உள்ளது. இதற்கு காரணம் அந்த காலத்தில் இருந்த சங்க இலக்கியங்களும் அவற்றின் நூற்பதிவுகளும் கடல்கோள்களுக்கு இறையானது தான். எனவே அந்த காலத்தை தமிழ் வரலாற்றின் இருண்ட காலம் என கூறினால் அது மிகையாகாது. தமிழின் முதல் இரண்டு சங்கங்களுமே இந்த இருண்ட காலத்தில் தான் இருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த இரண்டு சங்கங்களின் நூல்கள் கடலுக்கு மட்டுமே கிடைத்த தமிழ் புதையல்களாக மறைந்துவிட்டன. இந்த சங்க இலக்கியங்கள் பிறப்பதற்கு முன் நம் குமரி மாந்தன் முழுமையான மரத்தமிழனாக வளர்ந்திருபான் என்பது இங்கு தெளிவாகிறது







இந்தக் காலத்தில் தமிழன் அடைத்த வளர்ச்சி பற்றிய தகவல்கள் இன்னும் ஒரு திறக்கபடாத பூட்டாகவே உள்ளது. ஆனால் சித்திர எழுத்துக்களிலிருந்து இன்றைய தமிழின் எழுத்துக்கள் இப்படித்தான் உருவாகியிருக்கக்கூடும் என யூகிக்கவும் அதை பற்றி ஆராயவும் உதவும் ஒரு திறவுகோலாக ப்ராமிக்கள் பயன்படுகின்றன.    தமிழிலிருந்து பல திராவிட மொழிகள் பிரிந்தது கூட தொல்காப்பியத்திற்கு பிறகு தான் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது. இன்று நாம் கொண்டாடும் பல தமிழ் இலக்கிய நூல்கள் தொல்காப்பியத்திற்கு பிறகு விளைந்தவை தான். அதாவது அவை எல்லாமே மூன்றாம் தமிழ்ச் சங்கத்தின் நூல்கள் தான். அதற்கு முன்னே தமிழ் முழுமையான வளர்ச்சி அடைந்திருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட சிறந்த இலக்கிய படைப்புகளை அன்றைய தமிழர்கள் உலகிற்கு கொடுத்திருக்க முடியும். இதன் மூலம் நம் தாய் மொழியின் வயதையும் அதன் வளர்ச்சியின் ஆரம்ப விளிம்புகளையும் உங்களால் உணர முடிகிறதா?

தமிழ் எழுத்துக்கள் சித்திர எழுத்துக்களிலிருந்து இப்படித்தான் வந்திருக்குமென கூறியது முற்றிலும் யூகங்களே. கிடைத்த ப்ராமி ஆதாரங்கள், கல்வெட்டுகள் மற்றும் பல தொல்பொருள் ஆதாரங்களின் விளைவே இந்த கருத்துக்கள். இதுநாள் வரை குமரி மாந்தர்களாக இருந்த தொடக்கநிலை தமிழர்கள் இந்த இருண்ட காலத்தில் தான் உலகம் போற்றும் தமிழர்களாக    பரிணாம வளர்ச்சி அடைந்தார்கள் என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மையாகிறது.

இனி வரும் பதிவுகளில் பண்டைத் தமிழர்களின் அறிவு மாட்சிமையையும் அதனால் விளைந்த “தமிழ் என்ற பெயர் பற்றியும் நம் மொழியை பற்றிய மேலும் பல தகவல்களையும் காண்போம்.  

Tuesday 30 October 2012

பதிப்பு உ(2) - தமிழின் முதல் பிறந்தநாள்


வணக்கம் நண்பர்களே!!!!
சென்ற பதிவில் குமரி கண்டத்தின் தோற்றத்தையும் அங்கு வாழ்ந்த குமரி மாந்தரையும் பற்றிக் கூறி இருந்தேன். அதோடு அவர்களின் சைகை மொழி உருவான வரலாற்றையும் கூறி இருந்தேன். அதை முதலில் படித்தவுடன், இந்த இடத்தில், இந்த மனிதரிடம் தான் உலகையே வியக்க வைக்கும், இளமைத் தன்மை மாறாத ஒரு செம்மொழி பிறந்திருக்குமென்று என்னால் யூகிக்க முடியவில்லை. ஆனால் இன்று மேலை நாடுகளும் வியக்கும் வண்ணம் அழியாத மாட்சிமையை கொண்டுள்ள நம் தாய் மொழி முதலில் உலகை பார்த்தது இங்கே தான். தமிழை முதல் முதலில் தாய் மொழியாக கொண்டவன் இந்த குமரி மாந்தன் தான் என்பதை நாம் இங்கு மறுத்துவிடமுடியாது. சரி, இப்போது கூறுங்கள் நம் தாய் மொழி ஏன் மனித இனம் பேசிய முதல் மொழியாக இருக்கக்கூடாது?
இதற்கான பதிலை நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
இப்போது நம் மொழி இந்த சைகை மொழியிலிருந்து எப்படி உருவானதாக கூறப்படுகிறது என்று பார்போம்.

தமிழின் முதல் பிறந்தநாள்:  
தமிழ்- இந்த பெயர் நம் மொழிக்கு எப்படி வந்திருக்கும் என்ற ஆவல் உங்களைப்போல் எனக்கும் இருந்தது. இந்த பெயர் தோன்றியதை அறிவதற்கு முன் தமிழின் எழுத்துக்களின் தோற்றம் பற்றிய தகவல்களை சற்று ஆராய்வோம். முன்னே கூறிய சைகை மொழியானதோரா” என்று கூறப்படும் மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இணைப்பாக விளங்கியது சுட்டொலிகள் எனப்படும் சுட்டிக்காட்டும் ஒலிகள் தான்.
இதுநாள் வரை சைகையிலேயே பேசிக்கொண்ட குமரி மாந்தன் அவனது மொழிக்கு எழுத்துருவம் கொடுத்த அந்த நாளையே தமிழின் முதல் பிறந்தநாளாக கருத்தில் கொள்ளுவோம். இந்த எழுத்துக்கள் தோன்றிய வரலாற்றை மற்றொறு பதிவில் விரிவாக கூறுகிறேன். சரி, இன்றிலிருந்து சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு நாளில், எப்போதோ ஒரு நேரத்தில் தான் குமரி மாந்தன் அவனின் மொழிக்கு எழுத்துருவம் தந்திருப்பான். ஒருவேளை அந்த நாளையும் நேரத்தையும் சரியாக தெரிந்திருந்தோமானால் தமிழின் ஆயுட்காலத்தை கணித்துவிட முடியுமோ என்னவோ.

குமரிமாந்தரின் பரிணாம வளர்ச்சி- ஒரு அறிவியல் பார்வை: 
               இவ்வளவு நாட்களாக சைகையாலேயே பேசிக்கொண்டிருந்த குமரி
சார்லஸ் டார்வினின்
உயிரினத்தோற்றம்(origin of life)
எனும் நூல்
மாந்தன் ஏன் திடீரென அவன் மொழிக்கு எழுத்துருவம் கொடுக்கவேண்டும்? இதற்கு பதில் காண நாம் பரிணாம வளர்ச்சியின் பழைய அத்தியாயங்களை சற்று புரட்ட வேண்டியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் என் நண்பருடன் உரையாடிய போது ஆதி மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி சில தகவல்கள் கிடைத்தன. இங்கிலாந்து நாட்டின் வரலாற்று மேதை திரு. சார்லஸ் டார்வின்உயிரினத்தோற்றம்” (origin of life) என்ற நூலின் வாயிலாக குரங்கை ஒத்த உருவம்கொண்ட மாந்தன் போன்ற உயிரினதோற்றங்களை பற்றி கூறியுள்ளார். மேலும்மனிதனின் பாரம்பரிய வளர்ச்சிஎனும் நூலில் குமரி மாந்தனையும், மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியையும் பற்றி குறிப்பிட்டுள்ளார்.  
 குரங்கிலிருந்து ஆதி மனிதனின்  மூளை வளர்ச்சி  அடைந்ததை காட்டும் பட்டியல்

       மனிதனின் பரிணாம வளர்ச்சியை பற்றி படிக்கும் போது சில சுவாரசியமான உண்மைகளைக்  கண்டறிந்தேன். ஒரு ஆய்வின் படி மனித மூளையின் பரிணாம வளர்ச்சிக்கும் சமையல் கலைக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாம். அதாவது, குரங்கிலிருந்து மனிதன் அறிவளவில் வளர்ச்சி அடைய மனிதன் தன் உணவை சமைத்து உண்டது தான் காரணம் என்கிறது அந்த ஆய்வு.  ஆதி மனிதன் தன் உணவை சமைத்து (அதாவது வேகவைத்து) உண்ண ஆரம்பித்த போது, அவன் ஒரு நாள் முழுவதும் அலைந்து பச்சையாக உண்ணும் உணவின் சத்து மிக சிறிய அளவிளான சமைக்கப்பட்ட உணவிலேயே கிட்டிவிட்டதாம். அதனால் அவன் ஒரு நாளில் உணவிற்க்காக செலவிடும் நேரம் மிக கணிசமாக குறைய ஆரம்பித்ததாம். மீதம் இருக்கும் நேரத்திலெல்லாம், அவன் ஆக்கபூர்வமான செயல்களை செய்ய தொடங்கினான் எனவும், இந்த செயல்களின் மூலம் மனிதனின் மூளை குரங்கிலிருந்து பல மடங்கு வளர்ச்சி அடைந்ததாகவும் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மூளை வளர்ச்சியே மனித இனத்தை குரங்குகளிலிருந்து பிரித்து எடுத்தது எனவும் பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வைப்பற்றி மேலும் தகவல்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை நோக்கவும்.


அன்றைய ஆதி மனிதன் தன் நேரத்தை ஆக்கப்பூர்வமாக செலவிடுவதை சித்தரிக்கும் வரைபடம்


எழுத்துருவம் பெறும் சைகை மொழி:
           சரி, இவ்வாறாக பரிணாம வளர்ச்சி அடைந்ததாக கருதப்படும் நம் குமரிமாந்தன் தன் சைகை மொழிக்கு எழுத்துருவம் கொடுக்கவேண்டும் என சிந்தித்ததும் இந்தக் காலகட்டத்தில் தான் இருந்திருக்க முடியும் என்பது என் யூகம்.  அவன் தன் நேரத்தை ஆக்கபூர்வமாக செலவிட்டதன் விளைவாக உருவானவை தான் வேட்டையாடும் கருவிகள், விவசாய கருவிகள் மற்றும் பல கலை படைப்புகள் என்கிறது ஆய்வு. இவையெல்லாம் அவனின் மனதில் ஏற்பட்ட ஏதோ ஒரு உந்துதலின் விளைவாகத் தான் உருவாகி இருக்கக்கூடும். அதே உந்துதல் தான் அவனின் கருத்துகளை எழுத்துக்கள் மூலம் பரிமாறிக் கொள்ளலாம் எனவும் சிந்திக்க தூண்டி இருக்கக்கூடும் என்பது என் கருத்து. இந்த எண்ணங்களின் விளைவாக தான் அன்றைய குமரி கண்டத்தில் நம் தமிழ் பிறந்திருக்ககூடும். ஆனால் இவை எல்லாம் இப்படித்தான் நடந்திருக்கும் என்பது முற்றிலும் கணிப்புகளே. உண்மையில் எப்படி வேண்டுமாயினும் நடந்திருக்கலாம். உண்மையிலேயே இப்படித்தான் குமரிமாந்தன் பரிணாம வளர்ச்சி அடைந்தான் என்று நான் ஆணித்தரமாகக் கூற வேண்டுமென்றால் என் வயது இப்போது லட்சங்களில் இருக்கவேண்டும்.




       எது எப்படியோ, இதுவரை உள்ள வரலாற்று ஆதாரங்களின் மூலம், நம் மொழி இப்படித்தான் எழுத்துருவம் பெற்றிருக்கக்கூடும் என
நம்புவோம். இந்த இடத்தில் ஒரு முக்கியமான நிகழ்வை நாம் மறந்துவிடக்கூடாது. குமரிமாந்தனின் பரிணாம வளர்ச்சியின் விளைவாக அவன் குரங்கிலிருந்து பிரிந்து மனிதனாக மட்டும் மாறவில்லை, தன் மொழிக்கு எழுத்துருவம் கொடுத்ததன் மூலம் உலகின் முதல் தமிழனாகவும் மாறி இருக்கிறான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அன்று அவன் மொழிக்கு எழுத்துருவம் கொடுத்தபோது பிறந்தது தமிழ் மட்டுமல்ல நம் தமிழ் சமூகமும் தான்.
      இவ்வாறு பிறந்ததாக கருதப்படும் நம் மொழிக்கு தமிழ் என்று யார் பெயர் வைத்தார்கள்? அப்படியே யாரேனும் வைத்திருந்தால் ஏன் அந்த மூன்று எழுத்துக்களை தேர்ந்தெடுக்க வேண்டும்? தமிழ் மொழி பிறந்த அந்த காலக்கட்டத்திலேயே அது தமிழ் என்று தான் வழங்கப்பட்டதா?
         இந்த கேள்விகளுக்கான பதில்களுடன் உங்களை அடுத்த முறை சந்திக்கிறேன்.


இந்த பதிவிற்கு மூலமாக விளங்கிய இணைப்புகள்:

2)   http://vavuniya.com/writing/essay1.htm

Thursday 25 October 2012

பதிப்பு அ(1) - யார் குமரியின் மைந்தன்?


  
வணக்கம்!!

அனைவரையும் போல ஒரு சராசரி வாழ்க்கையை வாழும் இந்த சிறுவனின் ஒரு விநோதமான முயற்சியே இந்த படைப்புநான் இங்கு எதுவும் புதிதாக பதித்துவிட போவதில்லை. நம் அனைவருக்கும் தெரிந்திருக்கவேண்டிய நம் வரலாற்றின் சிறப்புகளை நமக்கே நினைவூட்டும் ஒரு முயற்சியே இது. இங்கு இருக்கும் பெரும்பாலான தகவல்கள், பலருடைய ஆய்வுகளின் விளைவுகளேயாகும். அப்படிபட்ட தகவல்களின் மூலத்தை (source) நான் இறுதியில் குறிப்பிட்டுள்ளேன்
  
குமரியின் மைந்தன் என்பவன் நானோ நீங்களோ அல்லது எந்த ஒரு தனி மனிதனோ அல்ல. பரந்த இந்த உலகில் தமிழ் என்ற ஒரு ஒப்பற்ற மொழியை பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்த ஒவ்வொரு உயிரும் குமரியின் மைந்தரே!   
குமரி என்பது ஒரு பெயர் மட்டுமல்ல, அது ஒரு நாகரீகம். நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத காலத்திலேயே நம் மூதாதயர்கள் உலகின் மிக வியக்கதக்க நாகரீகத்தை வகுத்துள்ளார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
இன்னும் குமரியின் (இலெமூரியா) சரியான காலம் வகுக்கப்படவில்லை. ஆனால் தற்போதைய ஆய்வின் படி குமரியின் வயது சுமார் 5,02,000 ஆண்டுகள். இது அந்த நிலபரப்பின் வயது மட்டுமல்ல, நம் தாய்மொழியான தமிழின் உத்தேசமான வயது. அந்த அளவுக்கு பெருமைவாய்ந்த நம் மொழியின் வரலாறு நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும்??


சரி, முதலில் குமரியின் வரலாற்றை சற்று உற்று நோக்குவோம்.

கடலுக்கடியில் இலமூரியா ( குமரி கண்டம்) மூழ்கி இருப்பதை காட்டும் வரைபடம்



   ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள்.
இலமுர் இனக்குரங்கு
  பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாகசந்தாத் தீவுகளிலிருந்துதொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம்இலமுர்” (Lemur) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர்.
        பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதியமறைந்த இலமுரியா” (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் குமரிமுனை வரை சென்று பின்பு தென் மேற்காகத் திரும்பி மடகாசுக்கர் என்னும் ஆப்பிரிக்கத் தீவு வரை சென்றது எனச் சுட்டிக் காட்டுகிறார் என பேராசிரியர் திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் கூறுகின்றார்.
   ஆஸ்திரேலியா,சாலித்தீவையும், தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடேகுமரி கண்டம்என்கிறார் திரு. தேவநேயப்பாவாணர். இக்கண்டத்தில் தோன்றியவன் தான்மாந்தன்இவனை குமரிமாந்தன் என்பர். இவனுடைய நிலை மொழியற்ற ஊமையர் நிலை தோரா. கிமு.500000-100000 வரையாகும்.


குமரியின் எல்லைகள்


குமரிமாந்தரின் மொழியற்ற நிலைசைகை மொழி(Sign language).
         குமரி நாட்டு மாந்தன், முற்காலகட்டத்தில் ஆடையின்றி விலங்குகளைப் போல் தன் இச்சைகளைப் பெற்று வந்தான். மனவுறமுமின்றி, மொழியுணர்ச்சியுமின்றி, உணர்ச்சியொலிகளையும், விளியொலிகளையும் கையாளத் தொடங்கினான். காலப் போக்கில் தன் கருத்துக்களைச் சைகைகளாலேயே வெளிப்படுத்தி வந்தான். (Gesture Language or Sign Language) இதை ஊமையர் மொழி என்றே கூறலாம்.


இயற்கை மொழி தோரா. கி.மு.1,00,000 – 5,00,000
      எழுத்தும், உச்சரிப்பும் சொற் பொருத்தமும் இல்லாமல் இயல்பாகப் பேசப்படும் ஒலித்தொகுதி (Natural Language) இயற்கை மொழியாம், இம்மொழியைமுழைத்தல் மொழி” (Gesture Language – or Sign Language) என்கிறோம். இம்மொழியின் ஒலிகள் 8 வகைப்படும். அவை
1. உணர்ச்சியொலிகள் (Emotional Sounds)இன்ப துன்ப உணர்வை வெளியிடும் ஒலிகள்.
2. விளியொலிகள் (Vocative Sounds) பிறரைவிளித்தல், அழைத்தல், கூப்பிடிதல் போன்றவைகள்.
3. ஒப்பொலிகள் (Imitative Sounds)இரு திணைப் பொருளுரைக்கும் ஒலிகள்.
4.குறிப்பொலிகள் (Symbolic Sounds) வழக்கப்படிகருத்துக்களைத் தெரிவிக்கும் ஒலிகள்.
5. வாய்ச் செய்கையொலிகள்வாயினாற் செய்யும் செய்கைகளும் செயல்களும்.
6. குழவி வளர்ப்பொலிகள் (Nursery Sounds)குழந்தைப் பருவத்தினருக்குப் பொருந்தும் ஒலிகள்.
7. சுட்டொலிகள் (Decitive Sounds)சுட்டிக் காட்டும் ஒலிகள் சுட்டொலிகள், மற்றும்.
8. வினாவொலிகள் என்பவைகளும் உண்டு,அவை ஐயம், சந்தேகம் மற்றும் வினாக்களைஎழுப்பும் ஒலிகள் எனப்படும்.
      
     சரி இப்போது இதற்கும் தமிழ்மொழியின் தோற்றத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?????
      இந்த கேள்விக்கான பதிலையும் இந்த தகவல்களின் மூலத்தையும் அடுத்த பதிவில் கூறுகிறேன்……..