Saturday 12 October 2013

பதிப்பு அ (8) - சிந்துசமவெளியில் வாழ்ந்தவர்கள் யார்?


வணக்கம்!                                     


சிந்து சமவெளி நாகரீகத்தைப் பற்றிப் பேசும்போது அங்கு வாழ்ந்த சுமார் 2 லட்சம் மக்களைப்பற்றி நினைவில் கொள்ளுவது அத்தியாவசியமாகிறது. அவர்கள் தோற்றுவித்தது ஒரு சீர்பட்ட வாழ்க்கை முறையை மட்டும் அல்ல; ஒரு வரலாற்றை. அவர்களின் அறிவு மாட்சிமையையும் நாகரீகத்தையும் பற்றி நான் முன்னே கூறினேன். ஆனால் அந்த சமூகத்தினர் தங்களுடன் உரையாடவும் இப்படி ஒரு சரித்திரத்தை உருவாக்கவும் பயன்படுத்திய தொடர்பு ஊடகம் எது என்பதை நாம் இங்கே ஆராயவேண்டியுள்ளது. இதற்கு முன் அங்கே வாழ்ந்தவர்கள் திராவிடர்களா அல்லது ஆரியர்களா எனும் குழப்பத்திலிருந்து தெளிவு பெறுவது அவசியம். இதற்கான பதிலையும் சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி என்னவாக இருக்கும் என்பதையும் பற்றி இப்பொது காண்போம்.   

சிந்து சமவெளியின் மூலம்:

சிந்து சமவெளி நாகரீகத்தின் மூலத்தை விளக்குவதற்கு மூன்று விதமான வாதங்களை ஆய்வாளர்கள் முன் வைக்கின்றனர். முதலாவதாக சிந்துசமவெளியின் எழுத்துருவங்கள் எல்லாம் சமஸ்கிருதத்தின் ஆரம்ப நிலைகள் எனவும் அதை தோற்றுவித்தவர்கள் ஆரியர்கள் என்றும் கூறப்படுகிறது. இரண்டாவதாக சிந்துசமவெளி ஒரு திராவிட நாகரீகம் எனவும் அங்கு திராவிடமொழிகள் வாழ்ந்து வளர்ந்தன எனவும் ஒரு கருத்து நிலவுகிறது. மூன்றாவதாக அங்கு திராவிடமும் இல்லை ஆரியமும் இல்லை அது ஒரு தன்னிச்சையான சமூகம் எனவும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த மூன்று வாதங்களையும் துனைநிற்கும் கருத்துகளை இனி கூறுகிறேன்.


ஆரிய படையெடுப்பு தத்துவம்:







முதலாவதான வாதத்தை ஆரிய படையெடுப்பு தத்துவம் என இப்போது கருத்தில் கொள்ளுவோம். இதை முன்வைத்தவர் மஃஸ் முல்லெர் எனப்படும் ஜெர்மானியர். அவரைப்பொருத்த வரை சிந்து சமவெளி நாகரிகத்தினர் ஆரியர்கள். இதை துனை நிற்கும் கருத்துக்கள் ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதாவது கி.மு 1500 களில் சிந்து நதியை சுற்றி இருந்த நிலப்பரப்பில் ஒரு மாபெரும் படையெடுப்பு நிகழ்கிறது. இது வடமேற்கிலிருந்து வரும் “ஆரியர்கள்” எனும் குதிரை படை வீரர்களால் நடக்கிறது. அவர்கள் ஐரோப்பாவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் மொழி சமஸ்கிருதம் என்றும் குறிப்பிடப்படுகிறது. மேலும் சிந்து சமவெளியின் முத்திரைகளில் உள்ள “சுவஸ்திக்” எனப்படும் சின்னமும் ஆரியர்கள் வழிப்பாட்டின் கீழ் வரும் சின்னமாகும். எனவே அந்த படையெடுப்பிற்கு பின் சிந்து சமவெளியில் ஆரியர்கள் தோற்றுவித்த நாகரீகம் தான் சிந்துசமவெளி நாகரீகம் என்றும் அங்கு வழக்கில் இருந்த மொழி சம்ஸ்கிருதம் தான் என்றும் கூறுகிறது அந்த தத்துவம். சிந்துசமவெளியும் ஆரிய நாகரீகமும் ஒத்துபோகின்றது என்பதற்கு சமஸ்கிருதத்தின் வயது, ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ள ஆரிய கடவுள்களின் சில குறிப்புகள் மற்றும் சிந்து சமவெளியின் சில முத்திரைகளும் ஆதாரங்களாக விளங்குகின்றன.

ஆரிய படையெடுப்பு கிமு 1750 வில்
 நிகழ்ந்தமைக்கான சித்தரிப்பு
(படம்: thearyancontroversy.wordpress.com)

திராவிட தத்துவத்தை பற்றி கூறும் முன் மூன்றாவது வாதமாக வைக்கப்படும் தன்னிச்சை தத்துவத்தை சற்று ஆராய்வோம். இது சில அமெரிக்க அராய்ச்சியாளர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு வாதமாகும். அவர்களைப்பொருத்தவரை சிந்துசமவெளியின் முத்திரைகளை வைத்து அது ஒரு ஆரிய அல்லது திராவிட நாகரீகம் தான் என்ற முடிவிற்கு வந்துவிட முடியாது. மேலும் சிந்துசமவெளியின் எந்த எழுத்துபூர்வ அவணங்ளும் அதன் நாகரீகத்தை எடுத்துரைக்கும் விதமாக இல்லை. எனவே சிந்து சமவெளி நாகரீகம் ஒரு தன்னிச்சையான, அறிவால் சிறக்காத மக்கள் கூட்டத்தால் உருவாக்கப்பட்டது என்றும் அந்த மக்களுக்கும் ஆரியர்களுக்குமோ திராவிடர்களுக்குமோ சுத்தமாக தொடர்பு இல்லை  என்றும் முடிக்கிறது அத்தத்துவம்.

திராவிட தத்துவம்:





திராவிட தத்துவத்தின் படி சிந்து சமவெளியில் வாழ்ந்து வளர்ந்தவர்கள் தென்னகத்திலிருந்து புலம்பெயர்ந்த திராவிடர்களே ஆகும். இதற்கு சான்றாக பல கருத்துகளையும் ஆதாரங்களையும் முன்வைக்கின்றனர் ஆய்வாளர்கள். 1970களில் ருசிய ஆய்வாளர்கள் இந்த தத்துவத்தை ஆராய்ந்தனர். அவர்கள் சிந்துசமவெளியின் சில முத்திரைகள் திராவிடமொழிக்குடும்பத்தின் எழுத்துகளுடன்   ஒத்துப்போவது, திராவிடமொழிகள் இந்தியாவின் பல பகுதிகளிலும் பாக்கிஸ்தானிலும்  பரவியிருந்தது மற்றும் திராவிடமொழிகளின் வயதும் சிந்துசமவெளியின் காலமும் ஒன்றுபடுவது போன்ற பல கருத்துக்களின் மூலம் இந்த தத்துவத்தை உறுதிப்படுத்தினர். இன்றும் பல ஆய்வுகள் தெனிந்தியாவிற்கும் சிந்துசமவெளிக்கும் இருக்கும் ஒற்றுமைகளை நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இவை அனைத்தும் தத்துவங்களே. உண்மையில் அங்குவாழ்ந்தவர்கள் யாராக இருந்திருக்கக்கூடும் என்பதை ஆணித்தரமாக கூறுவது கடினம்.

ருசிய அறிஞர் யூரி க்னோரோசாவ்
(படம்: quintacolumna.com.)
இருந்தாலும் அங்கு வாழ்ந்தவர்கள் நம் பாட்டனும் முப்பாடனுமாக இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று நீங்கள் இங்கு சற்று சிந்தித்துப்பார்த்தால் உங்களுக்குள் ஒரு நிமிட மெய்சிலிர்ப்பு ஏற்படலாம். எதையும் உறுதியாக கூறமுடியாவிட்டாலும் இருக்கும் ஆதாரங்களைவைத்து சில யூகங்களை உண்மையென ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. ஆனால் அது அந்த யூகங்களை துணைநிற்கும் ஆதாரங்களின் தன்மையையும் தரத்தையும் பொருத்துதான் அமைகிறது. இவ்வாறு திராவிடத் தத்துவத்தை துணைநிற்கும் சில கருத்துக்களை நான் இனி குறிப்பிடுகிறேன். அதற்குப்பின் மற்றதத்துவங்களின் குறைகளையும் கூறுகிறேன்.

சிந்துசமவெளியில் வாழ்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் அறிவு மற்றும் கலை மாட்சிமையை நாம் இங்கு மெச்சிதான் ஆகவேண்டும். வெண்கல யுகத்தில் இவ்வளவு சீர்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்கி வளர்ப்பது சாதாரணமன்று. மேலே கூறிய மூன்றுதத்துவங்களுமே அங்கு வாழ்ந்த அந்த மனிதர்களின் வழித்தோன்றல்களை கண்டறிவதற்கான ஒரு முயற்சியாக தான் நான் நினைக்கிறேன். அவ்வளவு சிறப்புமிக்க ஒரு இனத்தின் சந்ததிகள் இன்றளவிலும் காலம் கடந்து வாழுகிறார்கள் என்று நினைத்தாலே நம்மில் சிலருக்கு அவர்களைப்பார்க்கவேண்டும் என்ற வாஞ்சை எழும். ஆனால் அந்த அறிவில் சிறந்த இனத்தின் தோற்றமே நம்மிலிருந்துதான் என்று உறுதிபடுத்தப்பட்டால் எப்படி இருக்கும்? அது உண்மையாகவே இருந்தாலும் ஏற்றுக்கொள்ளுவதும் கூடாததும் உங்கள் விருப்பம்.

அடுத்தப்பதிவில் நாம் அந்தத் தத்துவங்களை சற்றுக் கூர்ந்து ஆராய்வோம். பின்னர் சிந்துசமவெளி யாருடைய நாகரீகமாக இருந்திருக்கக்கூடும் என்பதை நீங்களே உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.

தேடல் தொடரும்…………     

குறிப்புதவிகளுக்கு நன்றி:
  1. Hinduism and the Indus Valley Civilization”. A Hindu Primer by Shukavak N. Dasa Copyright © 2007 Sanskrit Religions Institute. sanskrit.org. Retrieved 2013-10-12.
  2. The Aryan Migrations 1500-1200 BC”. © 2003 David Koeller. thenagain.info. Retrieved 2013-10-12.
  3. The Myth of the Aryan Invasion of IndiaBy David Frawley. hindunet.org. Retrieved 2013-10-12. 
  4. Pre-Historic, Indus Valley & Aryans”. indtravel.com. Retrieved 2013-10-12.
  5. Aryan Civilization a continuity of Indus Valley Civilization”. rottenview.blogspot.in. Retrieved 2013-10-12.
  6. The Aryan Controversy. Did they or did they not invade India?”. thearyancontroversy.wordpress.com. Retrieved 2013-10-12.      
  7. Aryan Re-Invasion Theory”. hinduhistory.info. Retrieved 2013-10-12.
  8. Aryan Invasion Theory: Neo-colonial captive minds- Devan Nair”. bharatabharati.wordpress.com. Retrieved 2013-10-12.
  9. Panic in Russia by the ‘end of the world’ maya”. quintacolumna.com.mx. Retrieved 2013-10-12.