Friday 21 June 2013

பதிப்பு ௭(7) - சிந்து சமவெளி - மீண்டெழுந்த வெண்கல யுகத்தின் புதையல்


வணக்கம்!


தங்கள் இணைப்பு மொழிகளிலிருந்து பிரிந்த திராவிட மொழிகளில் இன்று வரை கன்னித்தன்மையுடன் இருக்கும் மொழிகள் மிக சில. அந்தப் பட்டியலில் முதலில் இருப்பது நம் தமிழ் என்பது நாம் அறிந்ததே. தனித்தமிழ் இணைப்பு மொழியிலிருந்து பிரிந்த வெண்கல யுகத்தில், தமிழ் அடைந்த வரலாற்று மற்றும் இலக்கிய வளர்ச்சி நம்மால் யூகிக்க முடியாத வேகத்தில் நடந்தமைக்கான சான்றுகள் நம் சங்க இலக்கியங்களின் மூலம் நம்மால் யூகிக்க முடியும். தமிழின் வளர்ச்சியைப்பற்றி காண்பதற்கு முன் வெண்கல யுகத்தில் உருவான சில நாகரீகங்களைப் பற்றி சற்று அறிவோம்.     

எது நாகரீகம்?





நான் முன்னே கூறியது போல் கற்காலத்தில் வாழ்ந்த மனிதன் உலோகத்தை கண்டெடுத்த போது அவன் அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த ஆரம்பித்தான்; வெண்கல யுகம் பிறந்தது. கற்காலத்தில் குமரியிலிருந்து இடம் பெயர்ந்த திராவிடர்கள் பல இடங்களில் குழுக்களாக வாழ்ந்தனர். அந்தக்குழுக்கள் உலோகத்தை பயன்படுத்த ஆரம்பித்தபோது புதிய நாகரீகங்கள் உருவாகியதாக ஆய்வுகள் கூறுகின்றன. நாடோடிகளாக இருந்த மனிதர்கள் தங்களின் மூளை வளர்ச்சி, சூழல் போன்ற காரணிகளால் பண்பு மிகுந்த ஒரு சீர்பட்ட வாழ்க்கையை வாழ்த்தொடங்கினர். இதையே நாம் நாகரீகம் என்கிறோம். உலகின் பழம்பெரும் நாகரீகங்களாக கருதப்படுவது மெசப்பொடோமியா, எகிப்து, சீனா மற்றும் சிந்துசமவெளி நாகரீகங்களாகும். இதில் நாம் சிந்து சமவெளியை மற்றும் இங்கு சற்று உற்று நோக்குவோம்.  


உலகத்தின் மூத்த நாகரீகங்கள்
புகைப்படம்: 
mapsnworld.com


சிந்து சமவெளி நான் மேல் கூறிய அனைத்து நாகரீகங்களைப்போல் மிகவும் தொன்மையான ஒரு மூத்த நாகரீகம். அங்கு வாழ்ந்த மக்கள் கலாச்சாரம், எழுத்து, கலை, நிதிநிலை மற்றும் விவசாயம் போன்ற அம்சங்களில் மிகவும் சீர்பட்ட ஒரு நாகரீகத்தையே உருவாக்கி இருந்தனர். அன்றைய நாகரீகங்கள் எல்லாமே பெரும்பாலும் மக்களின் வாழ்வாதாரங்களாக விளங்கிய சில நதிகளை சார்ந்தும் அவற்றைச் சுற்றியுமே அமைக்கப்பட்டன. மெசப்பொடோமியாவிற்கு டிக்ரிஸ் மற்றும் யுப்ரேடஸ் நதிகள், சீனாவிற்கு மஞ்சள் நதி, எகிப்திற்கு நைல் நதி போல நம் சிந்து சமவெளிக்கு சிந்து மற்றும் சரசுவதி நதிகள் மூல நதிகளாக விளங்கின. 
நாகரீகங்களின் மூல நதிகள்
புகைப்படம்: wiki.sjs.org

இந்த நாகரீகம் நிகழ்ந்த காலம் சரியாக வெண்கல யுகமாக நாம் கருதும் கிமு 3000 முதல் கிமு 1000 வரையிலான காலம் தான் என்பதை தொல்பொருள் ஆதாரங்களின் மூலம் நம்மால் அறிய முடியும். ஆனால் இந்த நாகரீகத்தை தோற்றுவித்து வாழ்ந்தவர்கள் திராவிடர்களா அல்லது ஆரியர்களா என்பது ஒரு விவாதத்திற்குறிய ஒரு தலைப்பாகும். குமரியிலிருந்து சென்ற திராவிடர்கள் தான் சிந்து நதியை சுற்றி நகரங்களையும் நாகரீகத்தையும் தோற்றுவித்தனர் என்பதற்கும் ஆரியர்கள் இல்லை என்பதற்கும் துணைநிற்கும் கருத்துக்களை காண்பதற்கு முன் சிந்து நதியைச்சுற்றி உருவான அந்த நகரங்களின் கட்டமைப்பையும் சிந்து சமவெளியில் வாழ்ந்த மனிதர்களின் அறிவு வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சில சான்றுகளையும் பற்றி பார்போம்.

சிந்து சமவெளி:





சிந்து சமவெளி என்று கூறப்படுவது நான் முன்னே கூறியது போல் சிந்து மற்றும் அன்றைய சரசுவதி நதிகளைச்சுற்றி செழிப்புடன் இருந்த ஒரு நீண்ட நிலப்பரப்பாகும். அதன் எல்லைகளாக இன்று இருக்கும் சில இடங்களை ஆய்வாளர்கள் வகுக்கின்றனர். மேற்கில் பலுசிஸ்தானில் உள்ள மக்ரான் கடற்கரையையும் கிழக்கில் உத்திர பிரதேசத்தையும் வடக்கில் ஆப்கானிஸ்தானையும் தெற்கில் மகாராஸ்டிர மாநிலத்தையும் எல்லைகளாக கொண்டு சிந்து நதியை சுற்றி இருந்த அந்த நிலப்பரப்பே சிந்து சமவெளி ஆகும். ஒரு பண்பட்ட நாகரீகத்தை உருவாக்க தேவையான விவசாய நிலங்கள், வற்றாத நதிகள் போன்ற அனைத்து இயற்கை வளங்களையும் இந்த நிலபரப்பு கொண்டிருந்தமைக்கு ஆதாரங்கள் உள்ளன. மேலும் இந்த நாகரீகத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக செங்கற்களாலான வீடுகள், சாலையோர வடிகாலமைப்புகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களைக் கொண்ட நகரமைப்பை கூறினால் அது மிகையாகாது.




கிபி 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் “Narrative of Various Journeys in Balochistan, Afghanistan and Punjab” எனும் நூலில் சார்லஸ் மாசன் எனும் ஆங்கிலேயர் ஹரப்பா எனும் சிந்து சமவெளியின் நகரத்தைப் பற்றிய குறிப்புகளை எழுதினார். இதை தொடர்ந்து ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய நிறுவனத்திற்கான ரயில் பாதையை இன்றைய கராச்சி மற்றும் லாகூரிற்கு இடையே நிருவும்போது ஹரப்பாவின் சிதைவுகளில் மிஞ்சிய செங்கற்கள் கிடைத்தன. 1912 இல் முதலில் ஃப்லீட் என்பவர் ஹரப்பாவின் முத்திரைகளை கண்டெடுத்த பின் ஒரு பெரும் அகழ்வாய்வு திட்டத்தின் விளைவாக ஹரப்பாவும் அதை தொடர்ந்து மொகஞ்ச தாரோ எனும் நகரத்தையும் ஜான் மார்ஷல் என்பவரின் குழு 1931 இல் தோண்டியெடுத்தனர். காலச்சுழற்சியில் புதைந்தழிந்த ஒரு மூத்த நாகரீகத்தின் சிதவுகளை மீண்டும் வெளி கொண்டு வந்ததன் மூலம் ஆங்கிலேயர்கள் வரலாற்று அகழ்வாய்வில் ஒரு முத்திரை பதித்தனர். இதைத் தொடர்ந்து இன்றுவரை சிந்துசமவெளியை சார்ந்த அகழ்வாய்வுகளும் பல வியக்கத்தக்க தகவல்கள்களும் நமக்கு கிடைத்துக்கொண்டே உள்ளன.


ஹரப்பா மற்றும் மொகஞ்ச தாரோபுதைந்தழிந்த பாரம்பரியங்கள்


இன்றளவில் சிந்துசமவெளியைப்பற்றி அறிய நமக்கு நுழைவியாக விளங்குவது அகழ்வாய்வுகளால் தோண்டியெடுக்கப்பட்ட இரண்டு முக்கிய நகரங்களான ஹரப்பா மற்றும் மொகஞ்ச தாரோ ஆகும். ஹரப்பா என்பது இன்றைய பஞ்சாபையும் வடகிழக்கு பாக்கிஸ்தானையும் இணைக்கும் ஒரு நிலப்பரப்பும் மொகஞ்ச தாரோ என்பது சிந்து மாகாணத்தில் உள்ள ஒரு தொல்பொருளியல் குறியிடமும் ஆகும். இந்த நகரங்களின் வியக்கத்தக்க இயல்புகளாக வேறுபட்ட வாழ்விடங்கள், தட்டையான மேர்கூரைகளைக் கொண்ட வீடுகள், செங்கற்களாலான சீர்பட்ட நிர்வாக கட்டிடங்கள் மற்றும் வழிபாட்டு மையங்கள் திகழ்கின்றன

தோண்டியெடுக்கப்பட்ட மொகஞ்ச தாரோ
புகைப்படம்
:4. bp.blogspot.com





கட்டமைப்பைத்தவிர வர்த்தகம், விவசாயம், கலாச்சாரம், மொழி போன்ற பல துறைகளில் இந்த நாகரீகத்தினர் தேர்ந்து விளங்கியமைக்கு சான்றுகள் உள்ளன. இந்த இரு நகரங்களிலும் ஒரு வர்த்தகச் சந்தை ஊரின் மையத்தில் இருப்பதும் பல வகைகளான எடை கற்கள் கண்டெடுக்கப்பட்டதும் அளவு நிர்ணயம் செய்து வர்த்தகம் நிகழ்ந்தமைக்கு சான்றாகின்றன. மேலும் தனித்தன்மை வாய்ந்த பல வகையான முத்திரைகள் ஏற்றுமதி பொருட்களின் பண்புகளை குறிப்பதற்கு பயன்பட்டிருக்கலாம் எனும் கருத்தும் நிலவுகிறது. இதைத்தவிர மிருகங்கள், பசுபதி எனப்படும் மிருகங்களால் சூழப்பட்ட ஒரு யோகி என பல விதமான உருவங்களைப் பொரித்த சிறிய சதுரவடிவ முத்திரைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சீர்பட்ட நகரமைப்பை காட்டும்
 உயர்மட்ட காட்சி
புகைப்படம்: 
raffleshistorynotes.weebly.com






மேலும் அந்த நிலப்பரப்பில் விவசாயம் நடந்தமைக்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. பல ஆய்வாளர்கள் சிந்து சமவெளி மக்கள் பருத்தி, வாற்கோதுமை, எள் மற்றும் பட்டாணி போன்ற பயிற்களை அறுவடை செய்தனர் என்றும் இந்த விவசாயத்திற்கு உதவ அவர்கள் விலங்குகளை பழக்கினர் என்றும் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக மிருகங்களை மேய்க்கும் மனிதன், காளை மாடு போன்ற உருவங்கள் கொண்ட முத்திரைகள் விளங்குகின்றன. ஆனால் இன்று வழக்கிலிருக்கும் நவீன விவசாய முறைகள் அன்று பயன்பாட்டில் இருந்தமைக்கு ஆதாரங்கள் இல்லை. மாறாக சிறிய நிலங்களில் கலப்பைகள் மற்றும் இதர விவசாய கருவிகள் இல்லாத ஒரு துவக்கநிலை விவசாயமே நேத்தியாக அன்று நடந்திருக்கக்கூடும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு. இதற்கு விவசாயத்தை முதலில் முயற்சி செய்தது, இரும்பு பயன்பாட்டில் வராதது மற்றும் நீர்மேலான்மை முறைகள் சீராக வகுக்கப்படாமல் இருந்தது போன்றவை காரணங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.   

இவற்றைத்தவிர சிந்துசமவெளி நகரத்தினர் செப்பு, தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களைப் பயன்படுத்துதல் விலங்குகளை வேட்டையாடுதல், மீன் பிடித்தல் போன்ற அம்சங்களிலும் தேர்ந்து விளங்கினர் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன. இந்த அனைத்து துறைகளையும் தாண்டி எழுத்து மற்றும் மொழி ரீதியாக சிறந்த அறிஞர்களாக அந்த நாகரீகத்தினர் விளங்கியுள்ளனர் என்பதையும் அங்கே திராவிடமொழிகள் இருந்தமைக்கான சான்றுகளையும் இனி வரும் பதிவுகளில் பார்போம்.    

    

என் குறிப்புதவிகளுக்கு நன்றி:

  1. The Largest Bronze Age Urban Civilisation”. harappa.com. Retrieved 2013-04-29.
  2. Indus Valley Civilisation”. ancienthistory.about.com. Retrieved 2013-06-04
  3. “Harrapan Civilisation”. ancienthistory.about.com. Retrieved 2013-06-04
  4. Agriculture - Harappa”. sscnet.ucla.edu. Retrieved 2013-06-04
  5. Marshall,SirJ.http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTlWmjzPKgRlmHio8u3y9znYVlvOiGRckokJQKpWL92uEL87rl5ohn. Mohenjo-Daro and the Indus Civilisation, 3 vols, London: Arthur Probsthain, 1931
  6. Bronze age metal working”. wessexarch.co.uk .Retrieved 2013-06-20
  7. Harappan civilisation”.mapsnworld.com. Retrieved 2013-06-20
  8. River Valley Cultures”.wiki.sjs.org. Retrieved 2013-06-20
  9. Saraswathi River And Harappa”.classzone.com. Retrieved 2013-06-20
  10. Narrative of Various Journeys in Balochistan, Afghanistan and Punjab”.  Indianprice.com. Retrieved 2013-06-20  
  11. Excavations at Mohenjo- Daro”. raffleshistorynotes.weebly.com. Retrieved 2013-06-21
  12. Mohenjo- daro”. 4. bp.blogspot.com. Retrieved 2013-06-21
  13. Animal Seals”. Shunya.net. Retrieved 2013-06-21