வணக்கம்!!!
பழங்கால மனிதன் தன் அறிவை விரிவு செய்துகொள்ள ஆரம்பித்த
போதிலிருந்தே குழுக்களாக சேர்ந்து வாழ ஆரம்பித்திவிட்டான். ஆனால் அவன் குழுக்களாக பரவிய
போது தான் தன் மொழியை சூழ்நிலைக்கேற்றார்போல் மாற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதுவே
அவன் பேசிய மூலத்திராவிடமொழி பல மொழிகளாக மாற காரணமாக விளங்கியது. இதுவே திராவிடமொழிக்குடும்பம்
எனும் பெயரையும் பெற்றது. சென்ற பதிவில் இந்த திராவிடமொழிக்குடும்பம் உருவான விதத்தையும்
திராவிட இனத்தோன்றலின் காரணங்களையும் கூறினேன். இப்படி பட்ட திராவிடமொழிக்குடும்பத்தின்
வளர்ச்சியை பற்றிய தகவல்கள் பல ஆய்வாளர்களின் விவாதத்திற்குறிய தலைப்பாகவே உள்ளது.
இது அத்துணையுமே நான் முன்னே கூறியது போல யூகங்களையும் சில வரலாற்று தொல்பொருள் ஆதாரங்களையும்
அடிப்படையாக கொண்டு முன்வைக்கப்படும் கருத்துக்களே ஆகும்.
திராவிட இனம் தரணியெங்கும் பரவினர் என்று நான் ஏற்கனவே கூறினேன்.
திராவிடர்கள் இவ்வாறாக பரவியதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் சில கருத்துக்களை
முன் வைக்கின்றனர். அந்த கருத்துக்களை அறிவியல் மற்றும் வரலாற்று ரீதியாக இந்த பதிவில்
சற்று அலசுவோம்.
திராவிடமொழிக்குடும்பத்தின் வடிவமைப்பு:
திராவிட இனம் ஆசியா முழுவதும் பரவியதற்கு உணவு தேவைகள்,
நீர்நிலைகள் மற்றும் பல காரணங்கள் இருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வாறாக புலம் பெயர்ந்த
அவர்கள், தங்கள் வாழ்விடங்களுக்கு ஏற்ப தங்கள் மொழியை வடிவமைத்தனர். அவர்கள் இவ்வாறு
மூலதிராவிடமொழியை வடிவமைத்த விதங்கள் அவர்கள் வாழ்ந்த திணை நிலங்களின் தன்மைக்கேற்ப
மாறியது. இதன் விளைவாகதான் திராவிடமொழிக்குடும்பம் உருவாகியது. இந்த வடிவமைப்பை நாம்
இப்போது கருத்தில் கொள்ளுவோம். புலம் பெயர்ந்த திராவிடர்கள் அவர்கள் அறிந்த மூலமொழியை
பேசிப்பேசி காலப்போக்கில் அதோடு வேறு சில வட்டார ஒலிகளை சேர்த்தும் பயன்பாட்டிற்கு
வசதியில்லாத சில ஒலிகளை கழித்தும் பல திராவிடமொழிகளை உருவாக்கினர். சுமார் 50 மொழிகளை
கொண்ட இந்த மொழிக்குடும்பம் தான் ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் பரவி இருந்தது. இத்துணை
மொழிகளுக்கும் தாயாகவும் அவற்றின் வார்ப்புருவாகவும் விளங்கிய மூலதிராவிடமொழி இன்று
நாம் பயன் படுத்தும் தமிழை ஒத்து இருப்பதுதான் நாம் மார்தட்டி பெருமைபடக்கூடிய விடயம்.
திராவிட மொழிகளின் பெரும்பிரிவுகள்:
ஐம்பதிற்கும் மேற்பட்ட மொழிகளை வழக்கில் கொண்டிருந்த இந்த
திராவிடமொழிக்குடும்பத்தை ஆய்வாளர்கள் மற்றும் மொழியியல் வல்லுனர்கள் மூன்று பிரிவுகளாக
வகுத்துள்ளனர். அவை கீழ்வருமாறு
- மூல தென் திராவிடம் (proto-south dravidan)
- மூல மத்திய திராவிடம் (proto-central dravidan)
- மூல வடதிராவிடம் (proto-north dravidan)
பெரும் பிரிவுகள். (புகைப்படம்: anthropology.civilsprep.in) |
இதில் முதல் பிரிவான தென் திராவிடத்தை மட்டும் ஆய்வாளர்கள்
மேலும் இரண்டு உட்பிரிவுகளாக பிரித்துள்ளனர். அவை இலக்கிய வளமுள்ள தென் திராவிடம் மற்றும்
இலக்கிய வளமில்லா தென் திராவிடம் ஆகும். இவற்றை முதல் மூலதென்திராவிடம் (proto
south dravidan 1) மற்றும் இரண்டாம் மூலதென்திராவிடம் (proto south dravidan 2) எனவும்
வகுக்கலாம். தென்திராவிட மொழிக்குடும்பத்தில் நம் தமிழ் இருப்பதாலோ என்னவோ பலதரபட்ட
மொழியியல் ஆய்வாளர்களின் கவனம் தென்திராவிடமொழிகளை பற்றியே உள்ளது. இதுநாள் வரையில்
உள்ள பல திராவிடமொழி ஆய்வுகள் தென்திராவிடமொழிகளை மையமாக வைத்தே நடந்துள்ளது.
திராவிட மொழிகளின் உட்பிரிவுகள்:
இந்த முதல்
மூலத்தென்திராவிட மொழிக்குடும்பத்தில் (proto south dravidan 1) தமிழ், மலையாளம்,
இருலா, கொடகு,
குரும்பா, தோடா,
கோடா, படகா,
கன்னடம், கொரகா,
துளு போன்ற
பல மொழிகள்
அடங்கும் எனவும்
இரண்டாம் தென்திராவிட
மொழிக்குடும்பத்தில் (proto south
dravidan 2) தெலுங்கு, கொண்டி, கொண்டா,
குயி, குவி,
பெங்கோ, மான்டா
போன்ற பல
மொழிகள் அடங்கும்
எனவும் மத்திய
திராவிடத்தினுள் கொலாமி, நைக்ரி, நைகி, பர்ஜி,
ஒல்லாரி, கடபா
போன்ற மொழிகளும்
வடதிராவிடத்தினுள் கரு, மால்டோ,
பிராகுயி போன்ற
மொழிகளும் உண்டு
எனவும் திராவிட
மொழி ஆய்வாளர் திரு க்ரிஷ்ணமூர்த்தி அவர்கள்
“தி திராவிடியன்
லேங்குவேஜஸ்” (The Dravidian Languages by Bhadriraju
Krishnamurti; Cambridge University Press, Cambridge (South Asian edition),
2003) எனும் நூலில் வகுத்துள்ளார். இதில் இலக்கிய வளமுள்ள திராவிட மொழிகளாக தமிழ், மலையாலம், கன்னடம் மற்றும் தெலுங்கையும், துலு, படகா போன்ற மொழிகளை இலக்கிய வளமில்லா மொழிகளாகவும் அவர் வகுத்துள்ளார். நான் மேல் குறிப்பிட்டுள்ள அத்தணை மொழிகளையும் சேர்த்து வைத்து படித்தால் சற்று குழப்பம் வருவது இயற்கை தான். இதை இன்னும் எளிதாக்க ஒரு பட்டியலை உருவக்கியுள்ளார் திரு க்ரிஷ்ணமூர்த்தி.
இன்றைய நிலை:
எழுத்துக்கள் ரீதியாக இந்த மொழிகளையும் தமிழையும் ஒப்பிட்டால்
நம் தமிழினத்தின் வியத்தகு மொழியியல் அறிவை நாம் அறியலாம். அதை பற்றி கூறுவதற்கு முன்
பிற திராவிட மொழிகளின் இன்றைய நிலையை சற்று ஆராய்வோம். நான் மேல் கூறிய திராவிட மொழிகளின்
பல மொழிகள் இன்றும் பயன் பாட்டில் தான் உள்ளது. ஆனால் அவை இலக்கிய வளமில்லா மொழிகளே
ஆகும். பழங்குடியினர் மற்றும் மலை வாழ் திராவிடர்கள்
இன்றும் துலு, படகா, தோடா, நயினி, கேடகு போன்ற மொழிகளை பேசிக்கொண்டிருப்பதை நம் தென்
இந்தியாவில் காணலாம். மத்திய இந்தியாவில் பர்ஜி, ஒல்லாரி, குயி, குவி போன்ற மொழிகள்
இன்றும் வழக்கில் தான் உள்ளது. இந்தியாவை தாண்டியும் திராவிடம் இன்றும் வாழ்ந்த வண்ணம்
தான் உள்ளது. ஆம் பலுகிஸ்தானில் திராவிட பழங்குடி மக்கள் பிராகுயி மொழியை இன்றும் பயன்படுத்தி
வருவதற்க்கு ஆதாரங்கள் உள்ளன.
தமிழும் பிற திராவிட மொழிகளும்:
இங்கே குறிப்பிட்டுள்ள மொழிகளை தவிர வேறு
சில திராவிட மொழிகளும் இன்னும் வழக்கில் இருந்துகொண்டுதான் வருகிறது. நம் தமிழும் இன்னும்
வழக்கில் தான் உள்ளது. எனவே தமிழுக்கும் பிற திராவிட மொழிகளுக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும்
இல்லை என்ற எண்ணம் இங்கே சிலருக்கு எழுந்தால் அது தவறில்லை. இந்த எண்ணத்தை போக்கி தமிழின்
பெருமைகளை உங்களுக்கு உணர்த்தவே நான் இந்த வலைப்பதிவை பராமரித்து வருகிறேன். இன்று
வழக்கில் இருக்கும் பல திராவிட மொழிகளுடன் தமிழை ஒப்பிட்டால் தமிழ் தனக்குள் ஒளித்து
வைத்துள்ள மாண்புகளை நாம் அறியலாம். அதற்கு முன் ஒரு விடயத்தை நாம் கவனிக்க வேண்டும்.
தமிழ் ஒரு மூத்த திராவிடமொழி. தமிழைத் தவிர இன்று வழக்கில் இருக்கும் பெரும்பாலான,
ஏன் அனைத்து திராவிட மொழிகளுமே வயதாலும், இலக்கிய வளத்தாலும் தமிழை விட கீழே தான் உள்ளது.
எனவே இன்று வழக்கிலிருக்கும், வயதில் குன்றிய திராவிடமொழிகளை காலம் கடந்து கலைவளம்
குன்றாமலிருக்கும் கன்னித்தமிழுடன் ஒப்பிடுவது மூலத்திராவிடமொழியின் மூத்த குழந்தையை
அதன் எள்ளுப்பேரன்களுடன் ஒப்பிடுவது போலதான்.
இன்றைய திராவிட மொழிகளின் வாழ்விடங்கள். (புகைப்படம்: geocurrents.info) |
மூலத்திராவிட மொழியும் தமிழும்:
மூலத்திராவிடமொழி ஆசியா எங்கும் வலம் வந்த
போது பல திராவிடமொழிகளை ஈன்றது. ஆனால் அது தோன்றிய இடத்திலேயே திருத்திய வடிவம் கொண்டு
அங்கேயே குடியேறி இன்றும் வாழ்ந்து வருகிறது. இந்த திருத்திய வடிவம் கொண்ட மூலத்திராவிடமொழியை
தான் நாம் தமிழ் என்று வழங்குகிறோம். மூலத்திராவிடமொழி தரணியெங்கும் பரவி திராவிடமொழிக்குடும்பத்தை
உருவாகிய விதத்தையும் பிற திராவிடமொழிகளின் இன்றய நிலையையும் பார்த்துவிட்டோம். ஆனால்
தமிழுக்கும் மூலத்திராவிட மொழிக்கும் உள்ள பல ஒற்றுமைகளையும் சில வேறுபாடுகளையும் நான்
இன்னும் கூறவில்லை. மூலத்திராவிடமொழி அது தோன்றிய இடத்திலேயே நிலைபெற்று நின்ற வரலாறு
மிகப்பெரியது. மூலத்திராவிடமொழி தான் தமிழா அல்லது அதன் திருத்தப்பட்ட அவதாரம் தான்
தமிழா என்பது விவாதத்திற்குறியது.
மூலத்திராவிடமொழி தோன்றிய இடத்தில் தமிழாக
மாறியதையும், தமிழ் பிற தென் திராவிடமொழிகளின் தாயா அல்லது மூத்த சகோதரனா என்ற கேள்விக்கான
பதிலையும், மூலத்திராவிடத்திலிருந்து பிரிந்த தூய தமிழின் ஆரம்ப கால நிலையையும், பிற
திராவிட மொழிகளுக்கும் தமிழுக்கும் இடையே உள்ள வரலாற்று ஒப்பீடுகளையும் அடுத்த பதிவில்
கூறுகிறேன்.
என் குறிப்புதவிகளுக்கு நன்றி:
- The Dravidian Languages by Bhadriraju Krishnamurti; Cambridge University Press, Cambridge (South Asian edition), 2003.
- Subrahmanyam 1983, Zvelebil 1990, Krishnamurti 2003
- http://kaniyatamil.com/history.htm
- http://en.wikipedia.org/wiki/Dravidian_languages
- http://anthropology.civilsprep.in/linguistic-distribution-of-indian-population
- http://ebooks.cambridge.org/ebook.jsf?bid=CBO9780511486876
- http://www.phonetics.ucla.edu/appendix/languages/badaga/badaga.html
- http://badaga-photos.blogspot.in
- http://geocurrents.info/wp-content/uploads/2013/01/Dravidian-Language-Family-Map.png
- http://phys.org/news/2011-11-genographic-humans-migrated-africa-arabia.html