Tuesday 31 December 2013

பதிப்பு ௯ (9) - ஆரியமா திராவிடமா? - பாகம் 1.


வணக்கம்!


திராவிட தத்துவத்தின் ஆதாரக்கூறுகளை அலசுவதற்கு முன் ஆரிய படையெடுப்பு தத்துவத்தில் உள்ள சில முரண்பாடுகளைபற்றி முதலில் கூறுகிறேன். அதற்கு பிறகு சிந்துசமவெளியின் மக்கள் ஆரியர்களா என்பதை நீங்களே தீர்மானித்துகொள்ளலாம். ஆரியபடையெடுப்பு தத்துவத்தின் பலங்களாக விளங்குவது ரிக் வேதம், மஃஸ் முல்லெரின் வாதம் மற்றும் வடமேற்கிலிருந்து வந்த நாடோடி குதிரைபடை வீரர்களின் படையெடுப்பை பற்றி முன்வைக்கப்படும் கருத்துகளே ஆகும். இந்த மூன்று முக்கிய கருத்துகளிலுமே அந்த தத்துவதின் முரண்கள் ஒளிந்து இருப்பதை நாம் இங்கு உற்று நோக்கவேண்டியுள்ளது.

முரண்படும் மூத்தவேதம்:

முதலில் ரிக்வேதமும் இந்த தத்துவமும் முரண்பட்டு நிற்கும் சில இடங்களை குறிப்பிடுகிறேன்.


  • வேத இலக்கியங்களின் படி கிமு 3102 இல் கிருஷ்ணரின் மறைவிற்குபின் கலியுகம் பிறந்ததாம். இதுவே வேதங்களின் அறிவு எழுத்துருவம் பெற்ற காலமாக வேத வியாசர் கூறியதாக சொல்லபடுகிறது. கால அளவீட்டு ஆய்வுகளின்படி ரிக் வேதம் இயற்றப்பட்ட காலம் கிமு 4500 முதல் 3000திற்குள் இருக்கலாம் என உறுதிப்படுகிறது. எப்படியும் வேதங்களில் மூத்ததான ரிக்வேதம் தான் முதலில் எழுத்துருவம் பெற்றிருக்கமுடியும். எனவே சுமார் 1800 ஆண்டுகளுக்கு பின் வந்த ஆரியர்கள் இந்த வேதங்களை எழுதியதாகவோ கொண்டுவந்ததாகவோ நம்புவதில் தருக்கமில்லை.
  • மேலும் வடமேற்கிலிருந்து வரும் படையெடுப்பைப்பற்றி குறிப்பிடும் ரிக் வேதம் சிந்துசமவெளியின் நகரங்கள், நீர்மேலாண்மை வசதிகள், மக்கள் மற்றும் அவர்களின் கலைத்திறன்களைப் பற்றிய எந்த தகவல்களையும் கூறவில்லை.
  • ரிக் வேதத்தில் பருத்தியின் பயன்பாட்டைபற்றியும் எந்த குறிப்பும் இல்லை.  ஆனால் சிந்து சமவெளியில் பருத்தி ஒரு பிரதாண பயிறாக விளங்கியது நாம் அறிந்ததே. இதுவும் ரிக் வேதம் சிந்துசமவெளிக்கு முந்தய காலத்தில்தான் இயற்றபற்றிருக்ககூடும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இதன்பின்னும் ரிக் வேதம் ஆரியர்களுடையது எனவோ ஆரியர்கள் தான் சிந்து சமவெளியில் நாகரீகத்தை தோற்றுவித்தனர் எனவோ கூறுவது எந்த அளவிற்கு நியாயப்படி பொருந்தும் என்பதை நீங்களே எண்ணிக்கொள்ளுங்கள்.

முல்லெரும் முரண்பாடுகளும்:

அடுத்ததாக இந்த தத்துவத்தை முன் வைத்த மஃஸ் முல்லெர் இதிலிருந்து எப்படி முரண்படுகிறார் என காண்போம்.

  • 1853இல் மஃஸ் முல்லெர் “ஆரியா” எனும் வார்தையையும் ஆரிய இனத்தத்துவத்தையும் முதலில் அறிமுகப்படுத்தினார். இது சிந்துசமவெளி நகரங்கள் கண்டுபிடிக்கபடுவதற்கு சுமார் 70 ஆண்டுகள் முன் என்பது குறிப்பிடதக்கது. சிந்துசமவெளி மற்றும் இந்திய வரலாற்றையே உருவாக்கியவர்கள் இந்த ஆரியர்கள் தான் என இவர் கூறினார். மேலும் இந்துமதத்திற்கான அனைத்து இலக்கியங்களுமே வடமேற்கிலிருந்து வந்ததெனவும் இவரின் தத்துவங்கள் கூறின.
  • ஆனால் இந்த மஃஸ் முல்லெர் 1888இல் “ஆரியா” எனும் வார்த்தைக்கான விளக்கத்தை திருத்தி அமைத்துள்ளார். அதாவது ஆரியா என்பது ஒரு இனத்தை குறிக்கும் சொல் இல்லை எனவும் அது ஒரே மொழியை பேசும் ஒரு உயர்ந்த மக்கள் கூட்டதை தான் குறிக்கிறது எனவும் கூறியுள்ளார். இதுவே அவரின் முன் கூறிய தத்துவத்திற்கு முரணாக அமைந்துள்ளது.
    படம்: aryatva.com.
  • 1866இல் இவர் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் இந்தியாவில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் வேதங்களில் கூறியபடி ஒரு சமூகம் வாழ்ந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மொகஞ்ச தாரோவை தோண்டியெடுத்த திரு ஜான் மார்ஷல் அவர்களும் இதை உறுதி படுத்தியுள்ளார். அதன்படி பார்த்தாலும் ஆரிய படையெடுப்பு நிகழ்ந்த காலமும் சிந்து சமவெளிநாகரீகத்தின் காலமும் முரண்படுகிறது.
  • மேலும் வடமேற்கிலிருந்து வந்த ஆரியர்களை பற்றி கூறும் இந்த தத்துவம் வடமேற்கில் இருக்கும் எந்த ஒரு நதியையோ நிலப்பரப்பையோ பற்றி குறிப்பிடுவதில்லை.

படையெடுப்பு?!

அடுத்ததாக அந்த படையெடுப்பிலேயே சில முரண்களுள்ளதை சற்று ஆராய்வோம்.
  • ஆரிய படையெடுப்பு நிகழ்ந்து அவர்களே சிந்து சமவெளியில் நாகரீகத்தை நிறுவினர் என்று ஏற்றுகொள்ளும் முன் சில கேள்விகளுக்கு பதில் காணுவது அவசியம்.
  • ஒரு நிலபரப்பில் வாழ்ந்து வரும் பூர்வகுடிமக்களை வீழ்த்தி அவர்களை விரட்டியோ அடிமைபடுத்தியோ அங்கு ஆளுமை செழுத்தும் முறையே “படையெடுப்”பாகும். அப்போது ஆரிய படையெடுப்பின் போது சிந்து சமவெளியில் பூர்வகுடிகள் இருந்திருக்க தானே வேண்டும். இல்லாவிடில் அது எப்படி ஒரு படையெடுப்பாகும்?
    படம்: sol.com.au.
  • அந்த காலகட்டத்தில் மிகவும் சீர்பட்ட அறிவைகொண்டு ஒரு நாகரீகத்தை ஆரியர்கள் வருவதற்கு முன்னே உருவாக்கிய ஒரு இனத்தை எந்த ஒரு வரலாற்று பின்னணியும் இல்லாத சில குதிரைப்படை நாடோடிகள் வீழ்த்திவிட்டனர் எனபது எந்த அளவிற்கு நம்பும்படி உள்ளது?
  • சிந்து சமவெளி தளங்களில் அம்புகள், ஆயுதங்கள் மற்றும் கேடையங்கள் போன்ற எந்த போர்கருவிகள் பயன்பாட்டில் இருந்தமைக்கான எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை. பின் எப்படி ஒரு படையெடுப்பு நிகழ்ந்ததை நம்பமுடியும்?
  • சில வரலாற்று ஆய்வாளர்கள், சிந்து சமவெளியின் பிரதான நதிகள் வற்றிய காலமும் ஆரிய படையெடுப்பு நிகழ்ந்தாக கூறப்படும் காலமும் ஒன்றுதான் என கூறுகின்றனர். இதை கருத்தில் கொண்டு; நதிகள் வற்றியதால் சிந்துசமவெளி மக்கள் புலம் பெயர்ந்திருக்கலாம். பின் அங்கு வந்து ஆரியர்கள் குடியேரி இருக்கலாம் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது.
  • வேதங்களின் அடிப்படையில் பார்த்தாலும் ஆரிய படையெடுப்பிற்கு முன் சிந்துசமவெளியில் ஒரு பெரும் இனம் வாழ்ந்துள்ளது என்பதும் இந்த இனம் ஆரியர்கள் இல்லை என்பதும் மேல் கூறிய கருத்துகளால் உறுதிபடுகிறது.
நான் இங்கு குறிப்பிட்டுள்ளதெல்லாமே ஆதாரங்களின் அடிப்படையில் ஆரியபடையெடுப்பு தத்துவத்திற்கு எதிராக நிலவும் சில கருத்துகளே ஆகும். இதை ஏற்றுகொள்ளுவது முற்றிலும் தனிபட்ட விருப்பமே. ஆரிய படையெடுப்பு தத்துவத்தை முன்மொழிந்த ஆங்கிலேயர்கள் அப்போது நம்மை ஆளுவதற்காக நம் வரலாற்றை மாற்றிகூறி நம்மை நம்ப வைத்தனர் என்றும் சிலர் கூறுகின்றனர். இதுவும் விவாதத்திற்குறிய கருத்தே ஆகும். எது எப்படியோ ஆரியர்கள் எனப்படுவோர் சிந்து சமவெளியில் நாகரீகத்தை உருவாக்கவில்லை என்றால் அங்கு யார் தான் அப்படி ஒரு சரித்திரத்தை படைத்தனர் என்பது இன்னும் ஒரு கேள்வியாகதான் உள்ளது. வேதங்களில் குறிப்பிட்டுள்ள அந்த இனம் திராவிடமாகவும் அங்கு வழக்கிலிருந்தது தமிழாகவும் ஏன் இருந்திருக்கக்கூடாது?

இதை பற்றி அறிய ஒரு மொழி ரீதியான அறிவும் ஆய்வும் இங்கு அவசியமாகிறது. ஆரியமா திராவிடமா எனும் விவாதத்திலிருந்து வெளியில் வந்து நம் வரலாற்றை அறியும் ஒரு முற்போக்கான ஆர்வமும் உந்துதலும் இருந்தால் மட்டுமே நம் வரலாற்றை அறியவும் காக்கவும் முடியும். விவாதங்களையும் தத்துவங்களையும் மீறி உண்மை என்று ஒன்று உள்ளது. அது நம் இன்று வாழும் இடங்களோடும் பேசும் மொழியோடும் தொடர்பு பட்டு இருந்தால் எப்படி இருக்கும் என்பது தான் வியப்பு. இதற்கு துணை நிற்கும் கருத்துகளுடனும் மேல் கூறிய கேள்விகளின் பதில்களுடனும் திராவிடதத்துவத்தின் ஆதாரங்களையும் சிந்து சமவெளிக்கும் திராவிடத்திற்கும் உள்ள ஒற்றுமைகளுடனும் மீண்டும் அடுத்த "ஆங்கில" ஆண்டில் சந்திக்கிறேன்.

தேடல் தொடரும்………

குறிப்புதவிகளுக்கு நன்றி:
  1. Aryan Civilization, A Continuity of Indus Valley Civilization”. rottenview.blogspot.in. Retrieved 2013-10-12.
  2. Saraswati River Necessitates Rewriting Of Indian History” by V.S.Gopalakrishnan. creative.sulekha.com. Retrieved 2013-12-23.
  3. “Death of the Aryan Invasion Theory” by Stephen Knapp. stephen-knapp.com. Retrieved 2013-12-23.
  4. “Aryan Invasion Theory”. Vedic Knowledge Online. Veda. veda.wikidot.com. Retrieved 2013-12-28.
  5. “What is Aryatva?”. Aryan Invasion Theory. Aryatva. In pursuit of everything noble. aryatva.com. Retrieved 2013-12-30.
  6. “Müller, Max”. Encyclopaedia Britannica. britannica.com. Retrieved 2013-12-30.
  7. “The Myth of the Aryan Invasion of India” By David Frawley. sol.com.au. Retrieved 2013-12-30.
  8. “Gurukul Education” Education. santodhavramvedicgurukul.com. Retrieved 2013-12-30. 
  9. Why the Rig Vedas Cannot Overlap with the Indus Valley Civilisation” Beyond Highbrow by Robert Lindsay.robertlindsay.wordpress.com.  Retrieved 2013-12-23.
  10. The Myth of the Aryan Invasion of India” By David Frawley. hindunet.org. Retrieved 2013-10-12. Retrieved 2013-12-21.  



Saturday 12 October 2013

பதிப்பு அ (8) - சிந்துசமவெளியில் வாழ்ந்தவர்கள் யார்?


வணக்கம்!                                     


சிந்து சமவெளி நாகரீகத்தைப் பற்றிப் பேசும்போது அங்கு வாழ்ந்த சுமார் 2 லட்சம் மக்களைப்பற்றி நினைவில் கொள்ளுவது அத்தியாவசியமாகிறது. அவர்கள் தோற்றுவித்தது ஒரு சீர்பட்ட வாழ்க்கை முறையை மட்டும் அல்ல; ஒரு வரலாற்றை. அவர்களின் அறிவு மாட்சிமையையும் நாகரீகத்தையும் பற்றி நான் முன்னே கூறினேன். ஆனால் அந்த சமூகத்தினர் தங்களுடன் உரையாடவும் இப்படி ஒரு சரித்திரத்தை உருவாக்கவும் பயன்படுத்திய தொடர்பு ஊடகம் எது என்பதை நாம் இங்கே ஆராயவேண்டியுள்ளது. இதற்கு முன் அங்கே வாழ்ந்தவர்கள் திராவிடர்களா அல்லது ஆரியர்களா எனும் குழப்பத்திலிருந்து தெளிவு பெறுவது அவசியம். இதற்கான பதிலையும் சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி என்னவாக இருக்கும் என்பதையும் பற்றி இப்பொது காண்போம்.   

சிந்து சமவெளியின் மூலம்:

சிந்து சமவெளி நாகரீகத்தின் மூலத்தை விளக்குவதற்கு மூன்று விதமான வாதங்களை ஆய்வாளர்கள் முன் வைக்கின்றனர். முதலாவதாக சிந்துசமவெளியின் எழுத்துருவங்கள் எல்லாம் சமஸ்கிருதத்தின் ஆரம்ப நிலைகள் எனவும் அதை தோற்றுவித்தவர்கள் ஆரியர்கள் என்றும் கூறப்படுகிறது. இரண்டாவதாக சிந்துசமவெளி ஒரு திராவிட நாகரீகம் எனவும் அங்கு திராவிடமொழிகள் வாழ்ந்து வளர்ந்தன எனவும் ஒரு கருத்து நிலவுகிறது. மூன்றாவதாக அங்கு திராவிடமும் இல்லை ஆரியமும் இல்லை அது ஒரு தன்னிச்சையான சமூகம் எனவும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த மூன்று வாதங்களையும் துனைநிற்கும் கருத்துகளை இனி கூறுகிறேன்.


ஆரிய படையெடுப்பு தத்துவம்:







முதலாவதான வாதத்தை ஆரிய படையெடுப்பு தத்துவம் என இப்போது கருத்தில் கொள்ளுவோம். இதை முன்வைத்தவர் மஃஸ் முல்லெர் எனப்படும் ஜெர்மானியர். அவரைப்பொருத்த வரை சிந்து சமவெளி நாகரிகத்தினர் ஆரியர்கள். இதை துனை நிற்கும் கருத்துக்கள் ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதாவது கி.மு 1500 களில் சிந்து நதியை சுற்றி இருந்த நிலப்பரப்பில் ஒரு மாபெரும் படையெடுப்பு நிகழ்கிறது. இது வடமேற்கிலிருந்து வரும் “ஆரியர்கள்” எனும் குதிரை படை வீரர்களால் நடக்கிறது. அவர்கள் ஐரோப்பாவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் மொழி சமஸ்கிருதம் என்றும் குறிப்பிடப்படுகிறது. மேலும் சிந்து சமவெளியின் முத்திரைகளில் உள்ள “சுவஸ்திக்” எனப்படும் சின்னமும் ஆரியர்கள் வழிப்பாட்டின் கீழ் வரும் சின்னமாகும். எனவே அந்த படையெடுப்பிற்கு பின் சிந்து சமவெளியில் ஆரியர்கள் தோற்றுவித்த நாகரீகம் தான் சிந்துசமவெளி நாகரீகம் என்றும் அங்கு வழக்கில் இருந்த மொழி சம்ஸ்கிருதம் தான் என்றும் கூறுகிறது அந்த தத்துவம். சிந்துசமவெளியும் ஆரிய நாகரீகமும் ஒத்துபோகின்றது என்பதற்கு சமஸ்கிருதத்தின் வயது, ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ள ஆரிய கடவுள்களின் சில குறிப்புகள் மற்றும் சிந்து சமவெளியின் சில முத்திரைகளும் ஆதாரங்களாக விளங்குகின்றன.

ஆரிய படையெடுப்பு கிமு 1750 வில்
 நிகழ்ந்தமைக்கான சித்தரிப்பு
(படம்: thearyancontroversy.wordpress.com)

திராவிட தத்துவத்தை பற்றி கூறும் முன் மூன்றாவது வாதமாக வைக்கப்படும் தன்னிச்சை தத்துவத்தை சற்று ஆராய்வோம். இது சில அமெரிக்க அராய்ச்சியாளர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு வாதமாகும். அவர்களைப்பொருத்தவரை சிந்துசமவெளியின் முத்திரைகளை வைத்து அது ஒரு ஆரிய அல்லது திராவிட நாகரீகம் தான் என்ற முடிவிற்கு வந்துவிட முடியாது. மேலும் சிந்துசமவெளியின் எந்த எழுத்துபூர்வ அவணங்ளும் அதன் நாகரீகத்தை எடுத்துரைக்கும் விதமாக இல்லை. எனவே சிந்து சமவெளி நாகரீகம் ஒரு தன்னிச்சையான, அறிவால் சிறக்காத மக்கள் கூட்டத்தால் உருவாக்கப்பட்டது என்றும் அந்த மக்களுக்கும் ஆரியர்களுக்குமோ திராவிடர்களுக்குமோ சுத்தமாக தொடர்பு இல்லை  என்றும் முடிக்கிறது அத்தத்துவம்.

திராவிட தத்துவம்:





திராவிட தத்துவத்தின் படி சிந்து சமவெளியில் வாழ்ந்து வளர்ந்தவர்கள் தென்னகத்திலிருந்து புலம்பெயர்ந்த திராவிடர்களே ஆகும். இதற்கு சான்றாக பல கருத்துகளையும் ஆதாரங்களையும் முன்வைக்கின்றனர் ஆய்வாளர்கள். 1970களில் ருசிய ஆய்வாளர்கள் இந்த தத்துவத்தை ஆராய்ந்தனர். அவர்கள் சிந்துசமவெளியின் சில முத்திரைகள் திராவிடமொழிக்குடும்பத்தின் எழுத்துகளுடன்   ஒத்துப்போவது, திராவிடமொழிகள் இந்தியாவின் பல பகுதிகளிலும் பாக்கிஸ்தானிலும்  பரவியிருந்தது மற்றும் திராவிடமொழிகளின் வயதும் சிந்துசமவெளியின் காலமும் ஒன்றுபடுவது போன்ற பல கருத்துக்களின் மூலம் இந்த தத்துவத்தை உறுதிப்படுத்தினர். இன்றும் பல ஆய்வுகள் தெனிந்தியாவிற்கும் சிந்துசமவெளிக்கும் இருக்கும் ஒற்றுமைகளை நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இவை அனைத்தும் தத்துவங்களே. உண்மையில் அங்குவாழ்ந்தவர்கள் யாராக இருந்திருக்கக்கூடும் என்பதை ஆணித்தரமாக கூறுவது கடினம்.

ருசிய அறிஞர் யூரி க்னோரோசாவ்
(படம்: quintacolumna.com.)
இருந்தாலும் அங்கு வாழ்ந்தவர்கள் நம் பாட்டனும் முப்பாடனுமாக இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று நீங்கள் இங்கு சற்று சிந்தித்துப்பார்த்தால் உங்களுக்குள் ஒரு நிமிட மெய்சிலிர்ப்பு ஏற்படலாம். எதையும் உறுதியாக கூறமுடியாவிட்டாலும் இருக்கும் ஆதாரங்களைவைத்து சில யூகங்களை உண்மையென ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. ஆனால் அது அந்த யூகங்களை துணைநிற்கும் ஆதாரங்களின் தன்மையையும் தரத்தையும் பொருத்துதான் அமைகிறது. இவ்வாறு திராவிடத் தத்துவத்தை துணைநிற்கும் சில கருத்துக்களை நான் இனி குறிப்பிடுகிறேன். அதற்குப்பின் மற்றதத்துவங்களின் குறைகளையும் கூறுகிறேன்.

சிந்துசமவெளியில் வாழ்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் அறிவு மற்றும் கலை மாட்சிமையை நாம் இங்கு மெச்சிதான் ஆகவேண்டும். வெண்கல யுகத்தில் இவ்வளவு சீர்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்கி வளர்ப்பது சாதாரணமன்று. மேலே கூறிய மூன்றுதத்துவங்களுமே அங்கு வாழ்ந்த அந்த மனிதர்களின் வழித்தோன்றல்களை கண்டறிவதற்கான ஒரு முயற்சியாக தான் நான் நினைக்கிறேன். அவ்வளவு சிறப்புமிக்க ஒரு இனத்தின் சந்ததிகள் இன்றளவிலும் காலம் கடந்து வாழுகிறார்கள் என்று நினைத்தாலே நம்மில் சிலருக்கு அவர்களைப்பார்க்கவேண்டும் என்ற வாஞ்சை எழும். ஆனால் அந்த அறிவில் சிறந்த இனத்தின் தோற்றமே நம்மிலிருந்துதான் என்று உறுதிபடுத்தப்பட்டால் எப்படி இருக்கும்? அது உண்மையாகவே இருந்தாலும் ஏற்றுக்கொள்ளுவதும் கூடாததும் உங்கள் விருப்பம்.

அடுத்தப்பதிவில் நாம் அந்தத் தத்துவங்களை சற்றுக் கூர்ந்து ஆராய்வோம். பின்னர் சிந்துசமவெளி யாருடைய நாகரீகமாக இருந்திருக்கக்கூடும் என்பதை நீங்களே உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.

தேடல் தொடரும்…………     

குறிப்புதவிகளுக்கு நன்றி:
  1. Hinduism and the Indus Valley Civilization”. A Hindu Primer by Shukavak N. Dasa Copyright © 2007 Sanskrit Religions Institute. sanskrit.org. Retrieved 2013-10-12.
  2. The Aryan Migrations 1500-1200 BC”. © 2003 David Koeller. thenagain.info. Retrieved 2013-10-12.
  3. The Myth of the Aryan Invasion of IndiaBy David Frawley. hindunet.org. Retrieved 2013-10-12. 
  4. Pre-Historic, Indus Valley & Aryans”. indtravel.com. Retrieved 2013-10-12.
  5. Aryan Civilization a continuity of Indus Valley Civilization”. rottenview.blogspot.in. Retrieved 2013-10-12.
  6. The Aryan Controversy. Did they or did they not invade India?”. thearyancontroversy.wordpress.com. Retrieved 2013-10-12.      
  7. Aryan Re-Invasion Theory”. hinduhistory.info. Retrieved 2013-10-12.
  8. Aryan Invasion Theory: Neo-colonial captive minds- Devan Nair”. bharatabharati.wordpress.com. Retrieved 2013-10-12.
  9. Panic in Russia by the ‘end of the world’ maya”. quintacolumna.com.mx. Retrieved 2013-10-12.



Friday 21 June 2013

பதிப்பு ௭(7) - சிந்து சமவெளி - மீண்டெழுந்த வெண்கல யுகத்தின் புதையல்


வணக்கம்!


தங்கள் இணைப்பு மொழிகளிலிருந்து பிரிந்த திராவிட மொழிகளில் இன்று வரை கன்னித்தன்மையுடன் இருக்கும் மொழிகள் மிக சில. அந்தப் பட்டியலில் முதலில் இருப்பது நம் தமிழ் என்பது நாம் அறிந்ததே. தனித்தமிழ் இணைப்பு மொழியிலிருந்து பிரிந்த வெண்கல யுகத்தில், தமிழ் அடைந்த வரலாற்று மற்றும் இலக்கிய வளர்ச்சி நம்மால் யூகிக்க முடியாத வேகத்தில் நடந்தமைக்கான சான்றுகள் நம் சங்க இலக்கியங்களின் மூலம் நம்மால் யூகிக்க முடியும். தமிழின் வளர்ச்சியைப்பற்றி காண்பதற்கு முன் வெண்கல யுகத்தில் உருவான சில நாகரீகங்களைப் பற்றி சற்று அறிவோம்.     

எது நாகரீகம்?





நான் முன்னே கூறியது போல் கற்காலத்தில் வாழ்ந்த மனிதன் உலோகத்தை கண்டெடுத்த போது அவன் அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த ஆரம்பித்தான்; வெண்கல யுகம் பிறந்தது. கற்காலத்தில் குமரியிலிருந்து இடம் பெயர்ந்த திராவிடர்கள் பல இடங்களில் குழுக்களாக வாழ்ந்தனர். அந்தக்குழுக்கள் உலோகத்தை பயன்படுத்த ஆரம்பித்தபோது புதிய நாகரீகங்கள் உருவாகியதாக ஆய்வுகள் கூறுகின்றன. நாடோடிகளாக இருந்த மனிதர்கள் தங்களின் மூளை வளர்ச்சி, சூழல் போன்ற காரணிகளால் பண்பு மிகுந்த ஒரு சீர்பட்ட வாழ்க்கையை வாழ்த்தொடங்கினர். இதையே நாம் நாகரீகம் என்கிறோம். உலகின் பழம்பெரும் நாகரீகங்களாக கருதப்படுவது மெசப்பொடோமியா, எகிப்து, சீனா மற்றும் சிந்துசமவெளி நாகரீகங்களாகும். இதில் நாம் சிந்து சமவெளியை மற்றும் இங்கு சற்று உற்று நோக்குவோம்.  


உலகத்தின் மூத்த நாகரீகங்கள்
புகைப்படம்: 
mapsnworld.com


சிந்து சமவெளி நான் மேல் கூறிய அனைத்து நாகரீகங்களைப்போல் மிகவும் தொன்மையான ஒரு மூத்த நாகரீகம். அங்கு வாழ்ந்த மக்கள் கலாச்சாரம், எழுத்து, கலை, நிதிநிலை மற்றும் விவசாயம் போன்ற அம்சங்களில் மிகவும் சீர்பட்ட ஒரு நாகரீகத்தையே உருவாக்கி இருந்தனர். அன்றைய நாகரீகங்கள் எல்லாமே பெரும்பாலும் மக்களின் வாழ்வாதாரங்களாக விளங்கிய சில நதிகளை சார்ந்தும் அவற்றைச் சுற்றியுமே அமைக்கப்பட்டன. மெசப்பொடோமியாவிற்கு டிக்ரிஸ் மற்றும் யுப்ரேடஸ் நதிகள், சீனாவிற்கு மஞ்சள் நதி, எகிப்திற்கு நைல் நதி போல நம் சிந்து சமவெளிக்கு சிந்து மற்றும் சரசுவதி நதிகள் மூல நதிகளாக விளங்கின. 
நாகரீகங்களின் மூல நதிகள்
புகைப்படம்: wiki.sjs.org

இந்த நாகரீகம் நிகழ்ந்த காலம் சரியாக வெண்கல யுகமாக நாம் கருதும் கிமு 3000 முதல் கிமு 1000 வரையிலான காலம் தான் என்பதை தொல்பொருள் ஆதாரங்களின் மூலம் நம்மால் அறிய முடியும். ஆனால் இந்த நாகரீகத்தை தோற்றுவித்து வாழ்ந்தவர்கள் திராவிடர்களா அல்லது ஆரியர்களா என்பது ஒரு விவாதத்திற்குறிய ஒரு தலைப்பாகும். குமரியிலிருந்து சென்ற திராவிடர்கள் தான் சிந்து நதியை சுற்றி நகரங்களையும் நாகரீகத்தையும் தோற்றுவித்தனர் என்பதற்கும் ஆரியர்கள் இல்லை என்பதற்கும் துணைநிற்கும் கருத்துக்களை காண்பதற்கு முன் சிந்து நதியைச்சுற்றி உருவான அந்த நகரங்களின் கட்டமைப்பையும் சிந்து சமவெளியில் வாழ்ந்த மனிதர்களின் அறிவு வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சில சான்றுகளையும் பற்றி பார்போம்.

சிந்து சமவெளி:





சிந்து சமவெளி என்று கூறப்படுவது நான் முன்னே கூறியது போல் சிந்து மற்றும் அன்றைய சரசுவதி நதிகளைச்சுற்றி செழிப்புடன் இருந்த ஒரு நீண்ட நிலப்பரப்பாகும். அதன் எல்லைகளாக இன்று இருக்கும் சில இடங்களை ஆய்வாளர்கள் வகுக்கின்றனர். மேற்கில் பலுசிஸ்தானில் உள்ள மக்ரான் கடற்கரையையும் கிழக்கில் உத்திர பிரதேசத்தையும் வடக்கில் ஆப்கானிஸ்தானையும் தெற்கில் மகாராஸ்டிர மாநிலத்தையும் எல்லைகளாக கொண்டு சிந்து நதியை சுற்றி இருந்த அந்த நிலப்பரப்பே சிந்து சமவெளி ஆகும். ஒரு பண்பட்ட நாகரீகத்தை உருவாக்க தேவையான விவசாய நிலங்கள், வற்றாத நதிகள் போன்ற அனைத்து இயற்கை வளங்களையும் இந்த நிலபரப்பு கொண்டிருந்தமைக்கு ஆதாரங்கள் உள்ளன. மேலும் இந்த நாகரீகத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக செங்கற்களாலான வீடுகள், சாலையோர வடிகாலமைப்புகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களைக் கொண்ட நகரமைப்பை கூறினால் அது மிகையாகாது.




கிபி 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் “Narrative of Various Journeys in Balochistan, Afghanistan and Punjab” எனும் நூலில் சார்லஸ் மாசன் எனும் ஆங்கிலேயர் ஹரப்பா எனும் சிந்து சமவெளியின் நகரத்தைப் பற்றிய குறிப்புகளை எழுதினார். இதை தொடர்ந்து ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய நிறுவனத்திற்கான ரயில் பாதையை இன்றைய கராச்சி மற்றும் லாகூரிற்கு இடையே நிருவும்போது ஹரப்பாவின் சிதைவுகளில் மிஞ்சிய செங்கற்கள் கிடைத்தன. 1912 இல் முதலில் ஃப்லீட் என்பவர் ஹரப்பாவின் முத்திரைகளை கண்டெடுத்த பின் ஒரு பெரும் அகழ்வாய்வு திட்டத்தின் விளைவாக ஹரப்பாவும் அதை தொடர்ந்து மொகஞ்ச தாரோ எனும் நகரத்தையும் ஜான் மார்ஷல் என்பவரின் குழு 1931 இல் தோண்டியெடுத்தனர். காலச்சுழற்சியில் புதைந்தழிந்த ஒரு மூத்த நாகரீகத்தின் சிதவுகளை மீண்டும் வெளி கொண்டு வந்ததன் மூலம் ஆங்கிலேயர்கள் வரலாற்று அகழ்வாய்வில் ஒரு முத்திரை பதித்தனர். இதைத் தொடர்ந்து இன்றுவரை சிந்துசமவெளியை சார்ந்த அகழ்வாய்வுகளும் பல வியக்கத்தக்க தகவல்கள்களும் நமக்கு கிடைத்துக்கொண்டே உள்ளன.


ஹரப்பா மற்றும் மொகஞ்ச தாரோபுதைந்தழிந்த பாரம்பரியங்கள்


இன்றளவில் சிந்துசமவெளியைப்பற்றி அறிய நமக்கு நுழைவியாக விளங்குவது அகழ்வாய்வுகளால் தோண்டியெடுக்கப்பட்ட இரண்டு முக்கிய நகரங்களான ஹரப்பா மற்றும் மொகஞ்ச தாரோ ஆகும். ஹரப்பா என்பது இன்றைய பஞ்சாபையும் வடகிழக்கு பாக்கிஸ்தானையும் இணைக்கும் ஒரு நிலப்பரப்பும் மொகஞ்ச தாரோ என்பது சிந்து மாகாணத்தில் உள்ள ஒரு தொல்பொருளியல் குறியிடமும் ஆகும். இந்த நகரங்களின் வியக்கத்தக்க இயல்புகளாக வேறுபட்ட வாழ்விடங்கள், தட்டையான மேர்கூரைகளைக் கொண்ட வீடுகள், செங்கற்களாலான சீர்பட்ட நிர்வாக கட்டிடங்கள் மற்றும் வழிபாட்டு மையங்கள் திகழ்கின்றன

தோண்டியெடுக்கப்பட்ட மொகஞ்ச தாரோ
புகைப்படம்
:4. bp.blogspot.com





கட்டமைப்பைத்தவிர வர்த்தகம், விவசாயம், கலாச்சாரம், மொழி போன்ற பல துறைகளில் இந்த நாகரீகத்தினர் தேர்ந்து விளங்கியமைக்கு சான்றுகள் உள்ளன. இந்த இரு நகரங்களிலும் ஒரு வர்த்தகச் சந்தை ஊரின் மையத்தில் இருப்பதும் பல வகைகளான எடை கற்கள் கண்டெடுக்கப்பட்டதும் அளவு நிர்ணயம் செய்து வர்த்தகம் நிகழ்ந்தமைக்கு சான்றாகின்றன. மேலும் தனித்தன்மை வாய்ந்த பல வகையான முத்திரைகள் ஏற்றுமதி பொருட்களின் பண்புகளை குறிப்பதற்கு பயன்பட்டிருக்கலாம் எனும் கருத்தும் நிலவுகிறது. இதைத்தவிர மிருகங்கள், பசுபதி எனப்படும் மிருகங்களால் சூழப்பட்ட ஒரு யோகி என பல விதமான உருவங்களைப் பொரித்த சிறிய சதுரவடிவ முத்திரைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சீர்பட்ட நகரமைப்பை காட்டும்
 உயர்மட்ட காட்சி
புகைப்படம்: 
raffleshistorynotes.weebly.com






மேலும் அந்த நிலப்பரப்பில் விவசாயம் நடந்தமைக்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. பல ஆய்வாளர்கள் சிந்து சமவெளி மக்கள் பருத்தி, வாற்கோதுமை, எள் மற்றும் பட்டாணி போன்ற பயிற்களை அறுவடை செய்தனர் என்றும் இந்த விவசாயத்திற்கு உதவ அவர்கள் விலங்குகளை பழக்கினர் என்றும் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக மிருகங்களை மேய்க்கும் மனிதன், காளை மாடு போன்ற உருவங்கள் கொண்ட முத்திரைகள் விளங்குகின்றன. ஆனால் இன்று வழக்கிலிருக்கும் நவீன விவசாய முறைகள் அன்று பயன்பாட்டில் இருந்தமைக்கு ஆதாரங்கள் இல்லை. மாறாக சிறிய நிலங்களில் கலப்பைகள் மற்றும் இதர விவசாய கருவிகள் இல்லாத ஒரு துவக்கநிலை விவசாயமே நேத்தியாக அன்று நடந்திருக்கக்கூடும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு. இதற்கு விவசாயத்தை முதலில் முயற்சி செய்தது, இரும்பு பயன்பாட்டில் வராதது மற்றும் நீர்மேலான்மை முறைகள் சீராக வகுக்கப்படாமல் இருந்தது போன்றவை காரணங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.   

இவற்றைத்தவிர சிந்துசமவெளி நகரத்தினர் செப்பு, தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களைப் பயன்படுத்துதல் விலங்குகளை வேட்டையாடுதல், மீன் பிடித்தல் போன்ற அம்சங்களிலும் தேர்ந்து விளங்கினர் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன. இந்த அனைத்து துறைகளையும் தாண்டி எழுத்து மற்றும் மொழி ரீதியாக சிறந்த அறிஞர்களாக அந்த நாகரீகத்தினர் விளங்கியுள்ளனர் என்பதையும் அங்கே திராவிடமொழிகள் இருந்தமைக்கான சான்றுகளையும் இனி வரும் பதிவுகளில் பார்போம்.    

    

என் குறிப்புதவிகளுக்கு நன்றி:

  1. The Largest Bronze Age Urban Civilisation”. harappa.com. Retrieved 2013-04-29.
  2. Indus Valley Civilisation”. ancienthistory.about.com. Retrieved 2013-06-04
  3. “Harrapan Civilisation”. ancienthistory.about.com. Retrieved 2013-06-04
  4. Agriculture - Harappa”. sscnet.ucla.edu. Retrieved 2013-06-04
  5. Marshall,SirJ.http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTlWmjzPKgRlmHio8u3y9znYVlvOiGRckokJQKpWL92uEL87rl5ohn. Mohenjo-Daro and the Indus Civilisation, 3 vols, London: Arthur Probsthain, 1931
  6. Bronze age metal working”. wessexarch.co.uk .Retrieved 2013-06-20
  7. Harappan civilisation”.mapsnworld.com. Retrieved 2013-06-20
  8. River Valley Cultures”.wiki.sjs.org. Retrieved 2013-06-20
  9. Saraswathi River And Harappa”.classzone.com. Retrieved 2013-06-20
  10. Narrative of Various Journeys in Balochistan, Afghanistan and Punjab”.  Indianprice.com. Retrieved 2013-06-20  
  11. Excavations at Mohenjo- Daro”. raffleshistorynotes.weebly.com. Retrieved 2013-06-21
  12. Mohenjo- daro”. 4. bp.blogspot.com. Retrieved 2013-06-21
  13. Animal Seals”. Shunya.net. Retrieved 2013-06-21